சென்னை: ஒரே காரை மீண்டும் மீண்டும் 3 நபர்களிடம் விற்பனை செய்த பலே கில்லாடி கும்பலில், இருவர் காவல்துறையிடம் சிக்கிவிட, மற்ற மூவர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த மோசடி நடைபெற்ற இடம் சென்னை.

டொயோடா இன்னோவா காரில் ஜிபிஎஸ் சாதனத்தைப் பொருத்தி, அதை விற்றுவிட்டு, பின்னர் அந்தக் கார் எங்கிருக்கிறது என்பதை அந்த சாதனத்தின் உதவியுடனேயே கண்டுபிடித்து, விற்ற நபரிடமிருந்து அந்தக் காரை திருடிவிட்டு, பின்னர் இன்னொருவரிடம் மீண்டும் விற்பனை செய்வது என்ற உத்தியைப் பின்பற்றி வந்துள்ளது அந்த கும்பல்.

அந்தக் காருக்கு அவர்கள் வேறு பல டூப்ளிகேட் சாவிகளையும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா தயாரிப்பாளர் தணிகை என்பவரிடம் அவர்கள் அந்தக் காரை விற்று மீண்டும் திருடிய பின்னர் தரப்பட்ட புகாரில், இருவர் மட்டும் தற்போது சிக்கியுள்ளனர்.

தயாரிப்பாளர் தணிகை, காவல் நிலையத்தில் இருந்தபோது, பிடிபட்ட இரு மோசடி பேர்வழிகளும் அந்த காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அப்போது அந்த இருவரையும் தணிகை, தனக்கு கார் விற்ற கும்பலில் இருந்தவர்கள் என்று அடையாளம் காட்டினார்.

ஆன்லைன் மூலமாக தேடி, ரூ.6 லட்சத்திற்கு விலைபேசி அந்த காரை வாங்கியதாக தெரிவித்தார் படத் தயாரிப்பாளர் தணிகை. அவர்களில், நால்வரை சத்யா, ரிச்சர்ட், கணேசன் மற்றும் பாரதி என்று அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், அவர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.