டெல்லி: இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியா, டாக்டர் மன்மோகன்சிங் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘இந்தியா நம்பிக்கைக்குரிய மகனை இழந்துவிட்டது’  என சர்வதேச தலைவர்கள் இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டி உள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து எடுத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அவருடைய வீட்டுக்கு நேற்று இரவிலேயே சென்று மரியாதை செய்தனர். இதையடுத்து,  அடுத்த ஏழு தினங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கே.சி. வேணுகோபால் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

மன்மோகன் சிங்  மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்திய  பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் திமுக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில தலைவர்கள், முதல்வர்கள் என பல தரப்பினரும்,  மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உலக நாடுகளைச் சேர்ந்த சர்வதேச தலைவர்களும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், மன்மோகன் சிங்கை அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டாண்மையின் “சிறந்த சாம்பியன்” என்று அழைத்தார். “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அமெரிக்கா இந்திய மக்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. டாக்டர் சிங் அமெரிக்க-இந்தியா மூலோபாய கூட்டாண்மையின் மிகச் சிறந்த சாம்பியனாக இருந்தார், மேலும் அவரது பணி பலவற்றிற்கு அடித்தளம் அமைத்தது. கடந்த இரண்டு தசாப்தங்களில் அவரது தலைமைத்துவம் அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்றது. அமெரிக்க-இந்தியா உறவு,” என்று பிளிங்கன் கூறினார்.

மேலும், “இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிய அவரது பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்காக டாக்டர் சிங் வீட்டில் நினைவுகூரப்படுவார். டாக்டர் சிங்கின் மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம், மேலும் அமெரிக்காவையும் இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான அவரது அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்வோம்.

இந்தியாவுக்கான ரஷிய தூதர்,  டெனிஸ் அலிபோவ்,  இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் கடுமையான சோகம் மற்றும் துக்கத்தின் தருணம். நமது இருதரப்பு உறவுகளில் டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒரு பொருளாதார நிபுணராக அவரது நிபுணத்துவம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி அவரது மென்மையான நடத்தை எப்போதும் விரும்பத்தக்கதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமரான ஸ்டீபன் ஹார்பர், எனது முன்னாள் சகாவான பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அறிந்து நான் வருத்தமடைந்தேன். அவர் விதிவிலக்கான புத்திசாலித்தனம், நேர்மை மற்றும் ஞானம் கொண்ட ஒரு தனிமனிதராக இருந்தார். லாரீனும் நானும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் டாக்டர் சிங்கை “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அசைக்க முடியாத கூட்டாளி மற்றும் நண்பர்” என்று விவரித்தார். “இந்தியா தனது சிறந்த மகன்களில் ஒருவரை இழந்து விட்டது. டாக்டர் மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அசைக்க முடியாத நட்பு மற்றும் நண்பராக இருந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும், அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையும்,” என்றார்.

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், தங்கள் நாட்டின் சிறந்த நண்பர் என, மன்மோகன் சிங்கை குறிப்பிட்டுள்ளார். “அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் மிகவும் விரும்பியுள்ளேன். அவர் தந்தையை போன்றவர்.” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.