வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது.

பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும் சற்று பெரியதாக தெரியும்.

அதேபோல் 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தோன்றும் அரிய நிகழ்வும் நடக்கும்.

அந்த வகையில் ஏற்கனவே ஆகஸ்ட் 1 ம் தேதி பௌர்ணமி வந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 30 ம் தேதியும் பௌர்ணமி வந்துள்ளது.

ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வரும் இந்த அரிய நிகழ்வை ஆங்கிலத்தில் ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், நிலவின் நிறத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

அதேபோல் வாழ்க்கையில் நடைபெறும் சில திடீர் நிகழ்வுகளை “ஒன்ஸ் இன் ஏ ப்ளூ மூன்” (Once in a blue moon) என்று சொல்வதுண்டு.

இதுபோன்ற ஒரு அரிய நிகழ்வாக சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகிய இரண்டும் இன்று நிகழ்கிறது.

இரவு 8:37 மணியளவில் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்ததை அடுத்து சென்னையில் உள்ள மக்கள் ஆர்வமுடன் நிலவின் பிரகாசத்தை ரசித்து மகிழ்ந்தனர்.