பெங்களூரில் பைக்கில் தப்ப முயன்ற திருடனை உயிரை பணயம் வைத்து காவலர் ஒருவர் தாவிப் பிடித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மஞ்ஜேஷ் பெங்களூரில் சுற்றித் திரிவதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
மஞ்ஜேஷ் மீது 75க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு சதாசிவ நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மஞ்ஜேஷை பார்த்து அடையாளம் கண்டுகொண்ட காவலர் தொட்டா லிங்கையா சிக்னலில் நின்றபோது அவரை எட்டி சட்டை காலரை பிடித்தார்.
தன்னை காவலர் ஒருவர் பிடிப்பதை உணர்ந்த மஞ்ஜேஷ் அவரிடம் இருந்து தப்பிக்க தனது வண்டியை ஓட்ட முயற்சிக்க விடாமல் பிடித்துக் கொண்ட லிங்கையா 20 மீட்டர் வரை வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.
https://x.com/journsuresh/status/1821422737996357746
கீழே விழுந்த நிலையிலும் மஞ்ஜேஷை விடாமல் அவரது கால்களை லிங்கையா பிடித்துக்கொண்டதால் தடுமாறிய மஞ்ஜேஷை அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த வேறு இரண்டு காவலர்கள் ஓடி வந்து மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட மஞ்ஜேஷ் மீது 75 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரிடம் இருந்து 130 கிராம் தங்கம் மற்றும் 10000 ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.