செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு செங்கல்பட்டிருக்கும் இடேயே சிங்கப்பெருமாள் கோயிலில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இதனை நேற்று திறந்து வைத்தனர்.
2008ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் பல்வேறு காரணங்களால் தடைபட்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது அதன் ஒரு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால் செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலத்தின் மீது ஏறி திருக்கச்சூர் வழியாக செல்லலாம்.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் இருந்து தாம்பரம் செல்லும் வாகனங்கள் திருக்கச்சூர் வழியாக வந்து இந்த மேம்பாலத்தின் மீது ஏறி செல்லலாம்.
தற்போது இந்த வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே கேட்டில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதனால் செங்கல்பட்டு – தாம்பரம் மார்க்கத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பாலத்தின் மற்றொரு பகுதியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இது முழு பயன்பாட்டிற்கு வரும் போது மஹிந்திரா சிட்டி மற்றும் திருப்போரூர் வரை செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]