டி.வி.எஸ். சோமு பக்கம்:
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு..
அன்பார்ந்த வணக்கம்.
சமீபத்தில்தான் பெரும் போராட்டம் நடத்தினீர்கள். அதில் (ஓரளவு) வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
அந்தப் போராட்டத்தை பயணிகள் – பொதுமக்கள் எவரும் எதிர்க்கவில்லை.
நியாயமான ஊதியம், பணி (பண)ப் பலன்களை அரசு வழங்காதது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள்தான். அதை முன்னிட்டு போராட்டம் நடத்துவதும் சரிதான்.
ஆனால் திடீரென வேலை நிறுத்தம் செய்து.. பயணித்துக்கொண்டிருந்த மக்களை பாதி வழியில் இறக்கிவிட்டீர்களே!
ஊனமுற்றோர், முதியவர், குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்கள், பள்ளி மாணவர்கள் (சிறுவர்கள்) என்று எந்தவித வேறுபாடும் பார்க்காமல் பாதி வழியில் பரிதவிக்க வைத்தீர்கள்.
நீங்கள் மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்கள் என்று உங்கள் சங்கங்கள் மூலம் நொடிக்கு நூறு முறை ஆதங்கப்பட்டீர்கள்.
பேருந்தில் பயணிப்போர் மட்டும் அரசபரம்பரையினரா.. கார்ப்பரேட் முதலாளிகளா?
குறைந்தபட்சம் ஆட்டோவில்கூட பயணிக்க வக்கில்லாத பாமர எளிய மக்கள்தானே பேருந்துகளை நாடுகிறார்கள்?
அன்று நீங்கள் பாதி வழியில் இறக்கவிடபோது, ஆட்டோவுக்கான பணம் இல்லாமல் எப்ப்படி சேருமிடம் அடைவது என்பது அறியாமல் தவித்த ஏழைகளின் கதறல்கள் உங்களுக்குக் கேட்டதா?
பேருந்துக்கான பாஸ் மட்டும் வைத்துக்கொண்டு, வீட்டுக்குச் செல்வது என்று தெரியாமல் சாலையோரத்தில் அழுது நின்றார்களே பள்ளிச் சிறுவர்கள்..
குறைந்தபட்சம், வாங்கிய காசுக்கு (டிக்கெட்டுக்கு) உரிய இடத்துக்குச் சென்ற பிறகு.. அல்லது இரவு அறிவித்து மறுநாள் போராட்டம் செய்யலாமே.. (சட்டப்படி இதுவே தவறுதான்.. உரிய நோட்டீஸ் கொடுத்தே வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது வேறு விசயம்..)
ஆனால் நீங்களும், உங்கள் சங்கங்களும் என்ன சொன்னீர்கள்..
“பாவப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளிகளின் நியாயமான கோரிக்கைக்களுக்காக மக்கள் சிறு (!) துன்பத்தை ஏற்கக் கூடாதா” என்றீர்கள்.
போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினர் எழுதிய கண்ணீர்க் கடிதங்களை சமூகவலைதளங்களில் உலவவிட்டீர்கள்.
“எங்களது போராட்டம் குறித்து எத்தனையோ முறை பிரச்சாரம் செய்தோம்.. நோட்டீஸ்கள் கொடுத்தோம்.. மக்கள் கவலைப்பட்டார்களா” என்றீர்கள்.
அய்யா.. ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள்…
பல வருடங்கள் முன்பு…
தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் அரசுப் பேருந்து. அதன் நடத்துநர், பயணிகளிடம் இயல்பாக அன்பாக பழகுவார். மரியாதையுடன் நடத்துவார்.
வழக்கமாக அந்த பேருந்தில் செல்லும் மக்கள், அந்த நடத்துநரை தங்கள் உறவாக நினைத்தனர்.
அவர் ஓய்வு பெற்ற அன்று.. அவரது கடைசி ட்ரிப்.
வழியில் அங்கங்கே நிறுத்தி அந்தந்த ஊர் மக்கள் அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர். நெகிழ்ந்து போய் கண்ணீர்விட்டார் ஓட்டுநர்.
இப்படி வேறு சில ஊர்களிலும் நடந்திருக்கக் கூடும்.
ஆனால் ஒட்டுமொத்தமாக ஓட்டுநர், நடத்துநர் செயல்பாடு எப்படி இருக்கிறதுஃ
பெரும்பாலானவர்கள் நிறுத்தத்தில் உரிய முறையில் நிறுத்துவதில்லை. தள்ளி நிறுத்துவது அவர்களது வழக்கம். ஓடிச்சென்று பயணிகள் ஏறுமுன் பேருந்தைக் கிளப்பிச் சென்றுவிடும் ஓட்டுநர்கள் பலர். இது அவர்களுக்கு ஒரு சுவாரஸ்ய விளையாட்டு போலும்.
(எங்களுக்கு டைமிங் இல்லை என்பீர்கள். இப்படி பேருந்தை எடுப்பதால் விபத்து ஏற்பட்டு பயணிகள் கைகால் போனால் என்ன ஆவது என்ற எண்ணம் இருக்க வேண்டுமே..!)
அதுமட்டுமல்ல ஒரு பக்கம் சில்லறை இல்லை என்கிற பிரச்சினை.. இன்னொரு பக்கம் சில்லறையை கடையில் கொடுத்து கமிசன் பெறும் நடத்துநர்கள் இல்லை என்று மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல முடியுமா?
மிக முக்கியமாக மரியாதையின்மை…
மக்கள், பணத்தையும் கொடுத்துவிட்டு, அவமரியாதையையும் பெறுவது உங்களிடம்தான். எத்தனை எத்தனை வசை வார்த்தைகளை பயணிகள் மீது வீசுகிறீர்கள்?
பிறகு எப்படி மக்கள் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்?
ஆக.. நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ.. அதைத்தான் அறுவடை செய்வீர்கள்.
சரி நேற்றும் இன்றுமான நிகழ்வுகளுக்கு வருவோம்.
தமிழக அரசு அளவுக்கு அதிகமாக.. திடீரென.. கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
மக்களுக்கு ஆத்திரம் வருவது இயல்பே. பல இடங்களில் நடத்துநர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பதிலுக்கு நடத்துநர்கள், “எங்க்கிட்ட ஏன் கேக்குற.. கவர்மெண்டுகிட்ட போயி கேளு” என மரியாதை இன்றி எதிர்வாதம் செய்கிறீர்கள். மக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.
நீங்கள் போராட்டம் நடத்திய போது என்னென்ன பேசினீர்கள்?
குறிப்பாக.. “எங்களுக்கு இதுதான் சம்பளம். ஆனால் நீதிபதிகளுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் நிறைய்ய்ய சம்பளம்” என்று ஆதங்கப்பட்டீர்களே..
அதே போல.. நாள் முழுக்க உங்களைவிட அதிகமாகக் கூட உழைத்து… உங்களைவிட குறைந்த ஊதியம் பெறும் கூலித்தொழிலாளிகளைப்பற்றி நினைத்துப் பார்த்தீர்களா?
உங்களுக்கு சோறுபோடும் எஜமானர்கள், இந்த எளிய மக்கள்தான். ஆனால் அவர்களைத்தான் தரக்குறைவாக பேசுகிறீர்கள்.
அநியாய கட்டண உயர்வை எதிர்த்து கேள்வி கேட்ட பயணிகளை ஆபாசமாக பேசுகிறீர்கள். தஞ்சையில் போராட்டம் நடத்தியவர்களுள் மாணவி ஒருவர் இதைச்சொல்லி கதறினாரே..!
இனியாவது திருந்துங்கள்…
ஓட்டை உடைசல் பேருந்து.. உட்காரக்கூட இடமில்லாத நிலை.. இதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் கீரை விற்பவர், கட்டிடத்தொழிலாளி போன்ற எளிய மக்கள் உங்களை வாழவைக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து “கட்டண உயர்வு” என்ற பெயரில் அநியாயமாக காசை பிடுங்கி அரசுக்குக் கொடுக்க துடிக்கிறீர்கள்.
இதில் இடதுசாரி தொழிற்சங்கம் என்கிற கோதா வேறு. வெட்கட்கேடு.
உங்களது இதே வாய்தான், “போக்குவரத்து ஊழியர்களுக்காக மக்கள் போராடினார்களா” என்று கேட்டது.
இப்போது கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கிறார்கள்.. போராடுகிறார்கள். நீங்கள் ஒதுங்கி நிற்கிறீர்கள்.
இப்போதல்லவா நீங்கள் போராட வேண்டும்?
உலக அளவு கணக்கீடுகளை எல்லாம் உங்கள் சங்கங்கள் சொல்கின்றனவே… தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் ஏற்படும் நட்டம் என்பது ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் சங்கங்கள் சிலவும் கூட இதைச்சொல்லியிருக்கின்றனவே?
உங்கள் தன்னலத்துக்கா போராட்டம் என்றபெயரில் திடீரென மக்களை பரிதவிக்க விட்டீர்களே..
இப்போது “போக்குவரத்து நிர்வாகத்தல் ஊழல், நிர்வாத்திறமின்மை நிலையைப் போக்க வேண்டும்” என்று மக்களுடன் நீங்களும் சேர்ந்து போராடலாமே!
ஆனால் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?
இன்று, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் பேருந்தில் நடந்த விசயம் இது. கூடுதல் கட்டணத்தை எதிர்த்து மக்கள் கேள்விகள் கேட்க.. அவர்களிடம் “விருப்பம் இல்லை என்றால் இறங்கலாம்” என ஓட்டுநர் கறாராக சொல்லியிருக்கிறார்.
மக்கள் போராட்டத்தில் இறங்கியருக்கிறார்கள்.
வலுக்கட்டாயமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டு, பேருந்து மீண்டும் உளுந்தூர்பேட்டை பணிமனைக்குச் சென்றிருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ஓட்டுநர் இரு மடங்காக பணம் கேட்டதால் நடுவழியிலேயே இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே சென்றிருக்கின்றனர்.
இன்னொரு சம்பவம்..
திருநெல்வேலியில் இருந்து ஈரோடு வந்த அரசு பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகளிடம் நடத்துநர் கூடுதல் கட்டணத்துக்கான பணம் கொடுத்தால் தான் பேருந்தில் ஏற வேண்டும் என்று மிரட்டலாக தெரிவித்திருக்கிறார்.
‘‘முன்பதிவு செய்ததால் கூடுதல் பணம் எடுத்துவரவில்லை” என்று பயணிகள் மன்றாடியும் நடத்துநர் வசூல் செய்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார்.
வேறு செலவுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து கூடுதல் தொகையை அளித்திருக்கிறார்கள் பயணிகள். செல்லும் இடத்தில் இதர செலவுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்?
உங்களது கேள்வி.. “அரசு உத்தரவு.. நாங்கள் என்ன செய்ய முடியும்..” என்பதாக இருக்கும்.
அரசு உத்தரவை.. முடிவை.. எதிர்த்துத்தானே உங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினீர்கள்.. அதுவும் ஒரு வாரத்துக்கு மேலாக..
அதே போல, “கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்க முடியாது” என்று நியாயமான போராட்டத்தை நடத்த உங்களுக்கு ஏன் துணிவில்லை.. அல்லது மனம் இல்லை?
ஜப்பான் நாட்டில் போராட்டம் நடத்துவது குறித்து இப்படிச் சொல்வார்கள்..
செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் போராட்டம் என்றால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்களாம். ஒரு கால் செருப்பு.. உதாரணமாக வலது கால் செருப்பை மட்டும் உற்பத்தி தயாரிப்பார்களாம்.
அவற்றை மட்டும் எப்படி விற்பனை செய்ய முடியும்? நிர்வாகம் இறங்கி வந்து தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்குமாம்.
அதாவது வேலையும் பாதிக்காது.. கோரிக்கையும் நிறைவேறும்.
அன்பார்ந்த போக்குவரத்துத் தொழிலாளிகளே…
உங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக மட்டும் போராடி… அதற்கு மக்கள் ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்கிறீர்களே..
உங்களது நிஜமான எஜமானர்களா பயணிகள் இப்போது கட்டண உயர்வை எதிர்த்து போராடுகிறார்கள்.
அவர்களிடம் அரசாங்கத்தின் ஏவல் ஆளாக மல்லுக்கட்டாதீர்கள். உங்களது வார்த்தைகளில் சொன்னால் கங்காணிகளாக இருக்காதீர்கள்.
மக்கள் போராட்டத்துடன்.. அவர்களுக்கும் தொல்லையின்றி இணையுங்கள்.. நிர்வாகத்தன் செயல்திறன் இன்மை.. ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமாக இதைக் கொண்டு செல்லுங்கள்.
அப்புறம்.. இன்னொன்று.. எப்போதும் பயணிகளை மதியுங்கள்.
உங்கள் மனசாட்சியுடன் கொஞ்சம் பேசுங்கள்.
இப்படிக்கு..
கூடுதல் கட்டணம் கொடுக்கமுடியாமல் திண்டாடும் பயணிகளில் ஒருவன்