கொப்பம், கேரளா
கேரளா மாநிலத்தில் ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்றி விட்டு எழுதும் போது தேர்வாளர் அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஞாயிறு அன்று மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடெங்கும் நடைபெற்றது. கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த கொப்பம் என்னும் ஊரில் உள்ள லயன்ஸ் பள்ளியிலும் இந்த பரிட்சை நடந்துள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க வந்த மாணவிகளின் உடைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த ஒரு 18 வயதான மாணவி ஒருவர் (பெண்ணின் விருப்பத்துக்கிணங்க பெயர் குறிப்பிடவில்லை) சோதனை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த உள்ளாடை (BRA) யில் உலோக ஊக்குகள் இருந்துள்ளன. அதனால் அவரை அந்த உள்ளாடையை கழற்றி விட்டு தேர்வு எழுதச் சொல்லி உள்ளனர். அந்தப் பெண் ஏற்கனவே தனது துப்பட்டாவை கழற்றி தனது பெற்றோரிடம் கொடுத்து விட்டு வந்துள்ளார்.
இப்போது உள்ளாடையையும் கழற்றி விட்டு தேர்வு எழுதி உள்ளார். தேர்வு அறையில் உள்ள ஆண் தேர்வாளர் இந்தப் பெண்ணின் மார்பையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதை கவனித்த அந்த மாணவிக்கு மிகவும் சங்கடமாக இருந்துள்ளது. இது ஒரு முறை அல்ல, பல முறை நிகழ்ந்துள்ளது. வினாத்தாளைக் கொண்டு தனது மார்பை மறைத்தவாறு மாணவி தேர்வு எழுதி உள்ளார்.
இந்த மாணவியைப் போல சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவிகளை உலோக ஊக்குகள் உள்ளதாக கூறி உள்ளாடையைக் கழற்றச் சொல்லி உள்ளனர். இது வழக்கமான ஒன்று என அந்த மாணவிகள் நினைத்துள்ளனர். தேர்வு எழுதி வீட்டுக்கு வந்த பின்பு தான் அந்த மாணவிகளுக்கு இந்த நிகழ்வு இந்த பள்ளியில் மட்டுமே நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நேற்று அந்த மாணவி தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தேர்வாளர் மீது நார்த் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் மேற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.