டில்லி:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்னும் 3 மாதங்கள் கூடி முடியவில்லை. ஆனால், அதற்குள் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் பல பாதகங்கள் இருப்பது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று இந்த வரி விதிப்பை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
இது வரை வரி விதிப்பில் இடம் பெறாமல் இருந்த சிறு தொழில்கள், வர்த்தகர்கள் இந்த வலைக்குள் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் கூடுதல் விபரம்…
ஜிஎஸ்டி.யில் உள்ள புதிய சவால்கள் என்ன? இதன் மூலம் என்ன பாடம் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளது?.
ஜிஎஸ்டி என்பது புதிய விதிமுறைகளுடன் கூடிய சட்டம். இது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது அனைவருக்கும் ஒரு புதிய விளையாட்டு. மக்களுக்கும், ஆடிட்டர்களுக்கும் இதை புரிய செய்து ஏற்றுக் கொள்ள செய்வது சவாலாக உள்ளது. இதில் நிறைய அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. சாதாரண மக்களுக்கு இது ஒரு விஷயம் கிடையாது. அவர்களுக்கான வரிவிதிப்பில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
இதில் எந்த பகுதி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது?
இதில் ரிவர்ஸ் சார்ஜ் என்ற ஒரு விதி உள்ளது. இதை தான் மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இதை 6 மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம். இதன் படி ஜிஎஸ்டி பதிவு பெற்ற ஒரு நபர் பதிவு செய்யாத ஒரு நபரிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கினால், இதற்கு ரிவர்ஸ் சார்ஜ் செலுத்த வேண்டியது பதிவு பெற்ற நபரில் பொறுப்பாகும். இதில் கூடுதல் வரிச் சுமை எதுவும் கிடையாது. இதில் இணக்க சுமையும் குறைந்தபட்சம் தான்.
இதன் மூலம் பதிவு பெறாத நபரிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் நபர் மாதத்திற்கு ஒரு ரசீது மட்டும் போட்டால் போதுமானது. அந்த ரசீதை வெளிப்புற பொறுப்பு என்ற தலைப்பில் வரி ஆவண தாக்கலின் போது தெரிவித்தால் போதுமானது. இதனால் அவர் கூடுதல் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பணவீக்கத்திற்கு ஜிஎஸ்டி காரணமா?
விலைவாசி உயர்வு ஒரு காரணமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மக்கள் இரண்டு விதமான புகார்களை தெரிவிக்கின்றனர். இதில் ஒன்று ஓட்டல். வரி செலுத்தும் போது மெனுவில் உள்ள உணவு பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. ஓட்டல்கள் ஒட்டுமொத்த வரியையும் வசூல் செய்கின்றன என்று புகார் செய்கின்றனர். இது சரியல்ல.
இரண்டாவது ரியல் எஸ்டேட். அவர்களுக்கு உள்ளீட்டு வரி கடன் கிடைக்கும். அந்த நிறுவனங்கள் முழு வரியையும் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்துகின்றனர். மாநில அளவில் இதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முறையிடலாம். அல்லது மத்திய கலால் ஆணையரிடம் புகார் தெரிவிக்கலாம்.
ஜிஎஸ்டி.யில் வரி விதிப்பு விகிதாச்சாரத்தில் கருத்து ரீதியிலான குறைபாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளதே?
அவ்வாறு குறைபாடு எதுவும் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் மட்டத்தில் பல விதமான வரி விதிப்புகள் இருந்தது. இவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எளிமையை யாரும் சிந்திக்கவில்லை. மக்களுக்கு தங்களது தொழில் வழக்கம் போல் செல்ல வேண்டும்.
அனைத்தும் ஒருங்கிணைத்து ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் வருவாய் அடிப்படையில் எந்த வகையான தாக்கம் ஏற்படும்?
இந்த கலப்பு திட்ட விரிவாக்கத்தால் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மின்னணு வழியிலான ரசீது முறை அமலாகும் வரை உடன்பாடு என்பது பிரச்னையாக தான் இருக்கும். மின்னணு வழி ரசீது முறை முழுமை அடைய 3 மாதங்கள் ஆகும். அதன் பிறகு வருவாய் அதிகரிக்கும்.
மின்னணு வழி ரசீது முறையில் ஏன் இன்னும் தாமதம் ஏற்படுகிறது?
சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பணி நடந்து வருகிறது. பரீட்சாத்திர முறையில் இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு சில மாவட்டங்களில் இதில் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அமல்படுத்திய விதத்தை இன்னும் சிறந்த முறையில் செய்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஜிஎஸ்டி.யை இன்னும் சிறந்த முறையில் வடிவமைத்திருக்கலாமா?
எந்த புதிய தொழில்நுட்பத்திலும் ஆரம்பத்தில் பிரச்னை இருக்க தான் செய்யும். சில மாற்றங்களை செய்ய அவகாசம் தேவைப்படும். அட்டவணை அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
எந்த விதமான மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம்?
வரிவிதிப்பு உச்சவரம்பு குறைய வாய்ப்பு குறைவு. சில பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.
மாநிலங்களுடனான பகிர்வு தற்போது உள்ள நடைமுறையே தொடருமா?
: மாநிலங்களுக்கு போதுமான அளவு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் வருவாய் என்பது அடுத்த 6 மாதத்தில் திரும்பும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.