இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.

“பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் வெள்ளை மாளிகையில் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், சீனாவுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை உறுதிப்படுத்தினார், மேலும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கான அடுத்த வேட்பாளராக இந்தியா இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டணியில் உரையாற்றிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் “அதிக தொலைவில் இல்லை” என்று கூறியிருந்தார்.

மேலும், இருநாடுகளும் இடையே அந்நிய நேரடி முதலீடு, சந்தை அணுகல், ஒழுங்குமுறை சீரமைப்பு, டிஜிட்டல் வர்த்தக தரநிலைகள் மற்றும் விவசாய ஏற்றுமதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சேவைகள் தாராளமயமாக்கல் மற்றும் தரவு பாதுகாப்பு கொள்கைகள் பற்றிய கவலைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சீனா உடனான தனது ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள அதிபர் டிரம்ப் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.