டில்லி

விதி எண் 370 நீக்கப்பட்டதற்கு பாஜக அரசை காங்கிரஸ் மூத்த  தலைவர் ஜனார்த்தன் திவிவேதி பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ பாஜக அரசு நீக்கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா உடனடியாக இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா குறித்த விவாதத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜனார்த்தன் திவிவேதி, “இது ஒரு பழைய விவகாரமாகும். சுதந்திரத்துக்குப் பிறகு பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்த விதி எண் 370 ஐ நீக்க வேண்டும் என கூறி உள்ளனர். நான் இந்த விஷயத்தில்  காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துப் போக மாட்டேன். எனது அரசியல் ஆசான் ராம் மனோகர் லோகியா விதி எண் 370 நீக்கப்பட வேண்டும் எனக் கூறி உள்ளார்.

அவர் வழியில் நாங்கள் இதே கருத்தை எங்களின் மாணவப்பருவத்தில் இருந்து கூறி வருகிறோம். எனது தனிப்பட்ட கருத்து விதி எண் 370 நீக்கப்படவேண்டும் என்பதே ஆகும். சுதந்திரம் பெற்ற போது நடந்த தவறு இன்று திருத்தப்பட்டுள்ளது. இது மிகவும் தாமதம் ஆகும். ஆயினும் வரவேற்கத் தக்க  முடிவாகும்.” எனத் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனார்த்தன் திவிவேதி இது போல் கட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் விமர்சித்த போது இவர் புகழ்ந்துள்ளார். அது மட்டுமின்றி சென்ற வருடம் ஜூலை மாதம் இவர் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது முதல் பல முறை கட்சிக்கு எதிரான  கருத்துக்களை திவிவேதி கூறி வருகிறார்.