பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இன்று காலை ஒரு துணிச்சலான மற்றும் திட்டமிடப்பட்ட கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து அந்த அருங்காட்சியகம் “தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக” மூடப்பட்டது.

சுமார் காலை 9:30 மணியளவில், நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில், நெப்போலியன் சேகரிப்பிலிருந்து ஒரு நெக்லஸ், ஒரு ப்ரூச், ஒரு தலைப்பாகை மற்றும் நெப்போலியன் III இன் மனைவி பேரரசி யூஜினியின் கிரீடம் உள்ளிட்ட ஒன்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள் திருடப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம் அருகே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பயன்படுத்தி குறைந்த கண்காணிப்பு உள்ள பகுதி வழியாக உள்ளே நுழைந்த அவரகள் ஃபோர்க்லிஃப்டைப் பயன்படுத்தி முதல் மாடியை அடைந்துள்ளனர்.

அங்கிருந்த ஜன்னலை அறுத்து அப்பல்லோ கேலரிக்குள் நுழைந்த அவர்கள் இரண்டு காட்சிப் பெட்டிகளை உடைத்து, “நெப்போலியன் நகைகள்” மற்றும் “தங்க நகைகள்” சேகரிப்புகளிலிருந்து விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளையடித்தனர்.

இரண்டு கொள்ளையர்கள் உள்ளே இருந்ததாகவும், ​​ஒருவர் வெளியே காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்தக் குழு இரண்டு T-MAX ஸ்கூட்டர்களில் A6 மோட்டார் பாதையை நோக்கித் தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் திருப்பட்டப்பட்டதாக கூறப்படும் பேரரசி யூஜினின் கிரீடம் அருங்காட்சியகத்திற்கு வெளியே உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது தப்பிக்கும் போது கீழே விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி கொள்ளையை உறுதிப்படுத்தினார், மேலும் அருங்காட்சியகத்தில் உள்ள தடயங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.