மாஸ்கோ:
ரஷியாவைச் சேர்ந்த சொகுசு கப்பல் தீப்பிடித்து எரிந்து நாசமானது. ரஷியாவின் வால்கா நதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா சொகுசு கப்பல் ஒன்று திடீரென பயங்கர தீ விபத்தில் எரிந்து நாசமானது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் நீஜ்னி நோவ்கரத் (Nizhny Novgorod) என்ற நகருக்கு அருகே ஓடும் வால்கா நதிக்கரையில் இந்த சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. ‘ஹோலி ரஷ்யா’ என்றழைக்கப்படும் சொகுசு கப்பல் கடந்த 2015ம் ஆண்டு செயல்பாட்டில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இந்த கப்பலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அந்த இடமே சாம்பல் புகை மண்டலமாக காட்சியளித்து. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹோஸ் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீயில் கப்பலின் பெரும்பாலான பகுதிகள் கருகி நாசமாயின. ஆளில்லாத கப்பல் என்பதால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.