ஜெயலலிதா
ஜெயலலிதா

சேலம்: இன்றும் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்துக்கு அழைத்துவரப்பட்ட இருவர் வெயில் கொடுமை தாங்காமல் உயிர் இழந்தனர். ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தனர்.
சேலம்-கோவை நெடுஞ்சாலையிலுள்ள மகுடஞ்சாவடியில் இன்று நடந்த, மேற்கு மண்டலம் மற்றும் கேரள அதிமுக வேட்பாளர்கள் அறிமுக பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.
இதற்காக அழைத்துவரப்பட்ட மக்கள், காலை 11 மணிக்கெல்லாம் மாநாட்டு பகுதியில் உட்காரவைக்கப்பட்டனர். வழக்கம்போல் ஜெயலிலதா மாலை நான்கு மணிக்கு வந்து உரையாற்றினார்.
அதுவரை வெயிலில் இருந்ததால் ஏற்பட்ட தாக்கத்தால், கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் அல்லல் பட்டனர்.  அவர்களில் பச்சையண்ணன் சுருண்டு விழுந்தார். அவரை ஆம்புலன்சில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியில் பச்சையண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரியசாமி என்பவரும் மயக்கமடைந்து உயிரிழந்தார். மேலும் பத்து பேர் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தனர்.
ஏற்கெனவே விருத்தாசலத்தில் இதே போல ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் வெயில் தாங்காமல் இருவர் பலியாகினர். பலர் மயக்கமடைந்தனர்.
அப்போதே பிரச்சாரத்தை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அ.தி.மு.க. தரப்புக்கு பலரும் ஆலோசனை வழங்கினர். ஆனால் பலிகளுக்குப் பிறகும் மாலை நான்கு மணி சுமாருக்கு ஜெயலலிதா மேடை ஏறுவதும், கூட்டத்துக்கு அழைத்துவரப்படும் மக்கள் காலை பதினோரு மணியிலிருந்து வெயிலில் அடைத்து வைக்கப்படுவதும், மக்கள் பலியாவதும் தொடர்கிறது.
இது குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசும்போது, “பிரச்சாரக்கூட்டத்துக்கு ஒவ்வொரு வேட்பாளரும் இருபதாயிரம் பேரை அழைத்துவரவேண்டும் என்பது உத்தரவு. அதன்படி ஐநூறு ரூபாய் கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். வருபவர்களுக்கு தொப்பி, வாட்டர் பாக்கெட் இலவசமாக அளிக்கப்படுகிறது. சாப்பாட்டு பொட்டலும் அளிக்கப்படுகிறது” என்றார்கள்.
ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டத்தில் தொடர் பலி ஏற்படுவது குறித்து தேர்தல் கமிசன் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே எழுந்தது. ஆனால் கமிசன் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டது.
சட்ட பிரமுகர்கள் சிலரிடம் இது குறித்து நாம் பேசியபோது, “இந்த விசயத்தில் தேர்தல் கமிசன் தலையிட உரிமை உண்டு.  பிரச்சாரக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கும்போது, இத்தனை ஆயிரம்பேர் கூடுவார்கள், அவர்களுக்கான வசதிகளைச் செய்திருக்கிறோம் என்று கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி வாங்கவார்கள். அதன்படி குறிப்பிட்டப்பட்டவர்கள்தான் கூடினார்களா அல்லது அதிகமானோர் கூடினார்களா..  என்பதை தேர்தல் கமிசன் ஆராயலாம். அதோடு கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்பது குறித்தும் கமிசன் விசாரணை செய்யலாம்.
ஏ.சி. மேடையில் ஜெயலலிதா, அனலில் மக்கள்
ஏ.சி. மேடையில் ஜெயலலிதா, அனலில் மக்கள்

பிரச்சாரக்கூட்டத்தில் பலியானவர்கள் அல்லது மயக்கமடைந்தவர்களின் உறவினர்கள் இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.
பிறர், பொது நல வழக்கு தொடரலாம்.
ஏனென்றால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெளியில் வரவேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்கள் சொல்கிறார்கள். அதாவது தமிழக அரசின் சார்பாக சொல்கிறார்கள். அதே தமிழக அரசின் தலைமைப் பொறுப்பாளரான முதல்வர்,  இதை கருத்தில் கொள்ளாமல் வெயிலில் கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆகவே இது குறித்து பொதுநலவழக்கோ, மனித ஆணையத்தில் முறையிடுவதோ தீர்வளிக்கும்” என்றார்கள்.
பொதுமக்கள், “அனல் பறக்கும் வெயிலில் காலையிலிருந்து மாலைவரை மக்கள் அடைத்து வைக்கப்படுகிறார்கள். கூட்டத்தில் இருந்து உடல் உபாதைகளைத் தீரக்க வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை. காவலர்கள் தடுக்கிறார்கள். அதே நேரத்தில் ஜெயலலிதாவுக்காக அமைக்கப்படும் மேடையில் ஏழு குளு குளு எந்திரங்கள் (ஏர்கண்டிசன் சாதனம்) வைக்கப்படுகின்றன.
உங்களால் நான், உங்களுக்காக நான் என்கிறார் ஜெயலலிதா. உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பது தாயான எனக்குத்தான் தெரியும்” என்கிறார் ஜெயலலிதா. ஆனால் உயிரை எடுப்பதாகத்தான் இருக்கிறது அவரது நடவடிக்கைகள். ஒருபுறம் டாஸ்மாக் மரணங்கள் இன்னொரு புறம் பிரச்சார மரணங்கள்..” என்று விரக்தியைக் கொட்டுகிறார்கள் மக்கள்.
இன்னொரு புறம், “ஏற்கெனவே தனது பிரச்சாரக்கூட்டத்தில் வெயிலால் பலிகள் நடந்ததற்குப் பிறகும் அதே போல அனலில் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஜெயலலிதா. ஒருவேளை ஜோதிடர் யாராவது இந்த நேரத்தில்தான் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறிவிட்டாரோ” என்கிற பேச்சும் அடிபடுகிறது.