டெல்லி:
இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 29-வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பதூர் யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் பேசுகையில்… எல்லையில் பணியாற்றும் வீரர்கள் வெறும் வயிற்றுடன் தூங்க செல்கிறோம். உயர் அதிகாரிகள் சட்டவிரோதமாக ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றனர். காலை உணவாக ஒரு புரோட்டா மற்றும் டீ வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு ஊறுகாய் அல்லது காய்கள் வழங்கப்படுவது கிடையாது.
நாங்கள் 11 மணி நேரம் எல்லையில் பணியாற்றுகிறோம். எல்லையில் பணிநேரத்தின் போது நாங்கள் பாதுகாப்பு பணிக்கு நின்றுக் கொண்டே உள்ளோம். மதியம் உணவாக ரொட்டியுடன் பருப்பு வழங்கப்படுகிறது. பருப்பில் வெறும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு மட்டுமே உள்ளது. இதுவே எங்களுக்கு கிடைக்கும் உணவின் தரமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு ராணுவ வீரர் எப்படி இதனை சாப்பிட்டு பணியாற்ற முடியும்? என்று யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்…இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கின்றேன். எங்களுடைய நிலையை யாரும் வெளிக்காட்டவில்லை. எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்விவகாரம் தொடர்பாக சரியான நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், அவர் ஒரு பத்திரக்கைக்கு அளித்த பேட்டியில் ….உணவின் தரம் குறித்து பதிவிடப்பட்ட வீடியோவை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். என்னுடைய பணியை இழப்பது குறித்து பயப்படவில்லை. எது உண்மையே அதனைத்தான் வெளிக்கொண்டு வந்துள்ளேன். என்னால் ராணுவ வீரர்கள் பயன் அடைந்தால், பின்னர் நான் எதிர்க்கொள்ள தயாராக உள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடத்தினால் அதிகமான உண்மைகள் வெளியே வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து எல்லையில் அவருடைய பணியானது மாற்றப்பட்டு உள்ளது.