1985ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையொன்று நாக்பூரின் மாத்ரு சேவா சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஒரு சில மாதங்கள் கடந்த நிலையில், அந்தக் குழந்தையை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்து தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினர்.

ஃபால்குன் பினென்டிஜ்க் என்ற அந்தக் குழந்தை தனது பெயர், நெதர்லாந்தில் உள்ள பிற டச்சு குழந்தைகளின் பெயர்களைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தபோது, தனது வாழ்க்கையில் ஒரு மறைக்கப்பட்ட உண்மை இருப்பதை அறிந்தார். அப்போது தான், தனது இந்திய தொடர்பும், தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பதும் அவருக்குத் தெரிய வந்தது.

அதன் பின்னர், “என் தாய் யார்?” என்ற கேள்வி, அவரது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

காலப்போக்கில், ஃபால்குன் தான் வாழ்ந்த பகுதியில் செல்வாக்கு மிக்க நபராக வளர்ந்தார். பின்னர், நெதர்லாந்தின் ஹீம்ஸ்டெட் நகரின் மேயராகவும் பொறுப்பேற்றார்.

இன்று 40 வயதாகியிருந்தாலும், தனது தாயைத் தேடும் முயற்சியை அவர் ஒருபோதும் கைவிடவில்லை.

2017 முதல் சிலமுறை இந்தியா வந்துள்ள அவர் 2024ம் ஆண்டு மூன்றாவது முறையாக நாக்பூர் வந்தபோது, மாத்ரு சேவா சங்கத்தின் முன்னாள் கண்காணிப்பாளர் மங்களா பூசாரியைச் சந்தித்தார்.

பிப்ரவரி மாதம் சமஸ்கிருதத்தில் ‘பால்குன’ மாதம் என்பதால், அந்த மாதத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு ‘ஃபால்குன்’ என்று தானே பெயர் வைத்ததாக மங்களா பூசாரி தெரிவித்தார்.

மேலும், 21 வயதுடைய திருமணமாகாத ஒரு இளம் பெண் அன்றைய சமூக அழுத்தம் மற்றும் பயம் காரணமாக ஒப்படைத்துச் சென்றதையும் தெரிந்துகொண்டார்.

இருந்தபோதும் தனது தாயை தேடுவதை தொடர்ந்து வரும் ஃபால்குன் தற்போது தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் மீண்டும் இந்தியா வந்துள்ளார்.

மகாபாரதத்தில் கர்ணன் தனது தாய் குந்தியை தேடியது போலவே, தானும் தனது தாயைத் தேடிவருவதாகக் கூறும் ஃபால்குன், “நான் உங்களுக்கு ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை. உங்கள் வாழ்க்கையை நான் சீர்குலைக்க விரும்பவில்லை. நான் உங்களை ஒருமுறை சந்திக்க மட்டுமே விரும்புகிறேன்,

உங்கள் கண்களைப் பார்த்து, ‘உங்கள் மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவன் பாதுகாப்பாக இருக்கிறான். அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்கிறது, அந்த வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு அவன் நன்றி கூறுகிறான்’ என்று சொல்ல விரும்புகிறேன். நான் உங்களுக்கு மன அமைதியைத் தர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளது அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது.

ஃபால்குனின் இந்த முயற்சிக்கு உதவும் வகையில் நாக்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன.

40 மற்றும் 41 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை தூசுதட்டிய அதிகாரிகள் ஃபால்குன் பிறந்தது 1985ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி என்பதை மட்டுமே உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும் அன்றைய சமூகம், சூழல் மற்றும் ஆவணங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யமுடியாததால் அவரது தாயை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

[youtube-feed feed=1]