ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சச்சின் பைலட் உள்பட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சட்டமன்ற சபாநாயகருக்கு  ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.  இதையடுத்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், கொறடாவின் கடிதத்தின் பேரில்,  அவர்கள்மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் சி.பி.ஜோஷி தகுதி நீக்கம் ஏன் செய்யக் கூடாது என நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியிருந்தார்.
இதற்கு தடை கேட்டு  சச்சின் பைலட் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினர். விசாரணையைத் தொடர்ந்து வரும் 24ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்த உயர்நீதி மன்றம், அதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தது.
இதை எதிர்த்து, சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதி மன்றமும், ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு கூற வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என்றும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும்  கூறியது.
அதன்படி,  வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சச்சின் பைலட் தரப்பில், இந்த வழக்கில்,  மத்திய அரசையும் மனுதாரராக சேர்க்கும்படி மனுத்தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற உயர்நீதி மன்றம், வழக்கில் மத்திய அரசையும் மனுதாரராக சேர்க்க  அனுமதி அளித்துள்ளது.
மேலும், தகுதி நீக்கத்திற்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு மீதான முடிவு வரும் இதே நிலை நீடிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.