ஐதராபாத்
சீன ராணுவத்தினர் நடத்திய மோதலில் உயிர் துறந்த கர்னல் சதோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி துணை ஆட்சியராக தெலுங்கானா அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் முகாம் இட்டதை அடுத்து அங்கு இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இரு தரப்பிலும் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சீனப்படைகளை திரும்ப அழைக்க சீனா ஒப்புக் கொண்டது ஆனால் திரும்பிச் செல்வதாக அறிவித்த சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
இதில் 20 இந்திய ராணுவத்தினர் உயிர் இழந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த 20 பேரில் தெலுங்கானாவைச் சேர்ந்த ராணுவ கர்னல் சந்தோஷ்பாபு என்பவரும் ஒருவர் ஆவார். இவர அம்மாநிலத்தில் சூரியப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். இவருடைய மரணத்தையொட்டி தெலுங்கானா முதல்வர் அவர் குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிவாரணம், ஒரு வீட்டுமனை மற்ரு அவர் மனைவிக்கு குரூப்1 அரசுப்பணி வழங்குவதாக அறிவித்தார்.
நேற்று சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் துணை ஆட்சியர் பதவி அளித்துள்ளார். தெலுங்கானா மாநில தலைமை செயலகத்தில் சந்தோஷியிடம் இந்த உத்தரவை முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்துள்ளார். மேலும் சந்தோஷிக்கு பயிற்சி அளித்து உதவி புரியுமாறு முதல்வர் தனது செயலர் ஸ்மிதா சபர்வாலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.