சென்னை:
ஜினி தன்னை முதல்வராக முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு உள்ளது என்று துக்ளக்  வாரப்பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார். துக்ளக் கேள்விப் பதில் பகுதியில் அவரது கருத்து இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசியல் மாபெரும் தலைவர்களாக இருந்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக தலைவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அரசியல் வெற்றிடம் உருவாகி உள்ளது. இதை நிரப்புவதற்கு தகுதியான தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினியை அரசியலுக்கு இழுக்க ஒரு கூட்டம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, தான் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், அது ஆன்மிக அரசியல் என்று கூறி 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் கட்சி பெயரைக்கூட அறிவிக்காத ரஜினி, அவ்வப்போது ரனது மக்கள் மன்றத்தினரை கூட்டி, அரசியல் கட்சி தொடங்கப்போவதாக ஜாலம் செய்து பரபரப்பை உருவாக்கி வருகிறார். இதுமட்டுமின்றி, மத்தியஅரசுக்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்தும் தான் தீவிர இந்துத்துவாதி என்பதை பறைசாற்றி உள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி காந்த்,  சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; இந்த நிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை,  பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்பார்கள் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து,  கடந்த மார்ச் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் கட்சி தொடங்கு வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தவர்,  தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்றும், இதனை ரசிகர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்த முடிவிற்கு அரசியல் நோக்கர்கள் பலரும் பலவித கருத்துக்களை கூறி வந்தனர். அவரது கருத்து ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில், இந்த வாரம் வெளியாகி உள்ள துக்ளக் வார இதழ் கேள்விப்பதில் பகுதியில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதாவது ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் மட்டும் கூறுவது எதை காட்டுகிறது என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் கூறியுள்ள குருமூர்த்தி, “ரஜினி தமது முடிவை மறு சிந்தனை செய்து, அவர் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது” என்று பதில் கூறியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என ஆரம்பம் முதலே வலியுறுத்தி வரும் குருமூர்த்தி,  அவர் அரசியலுக்கு வந்தால்,  இன்னொரு எம்ஜிஆராக உருவெடுப்பார், அவரால்தான்  தமிழகத்தில் அரசியல்  மாற்றம் ஏற்படும், அரசியலுக்கு வரவேண்டியது அவசியம் என்று கூறி வந்த நிலையில், தற்போது,  ரஜினி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் தமிழ்நாடு உருப்படும் என்று கூறியுள்ளார்.