பாட்னா
ரூ.2000 கோடி ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஸ்ரீஜன் மகிளா விகாஸ் சமிதி என்னும் தொண்டு நிறுவனம் கடந்த 2004 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் பாகல்பூரில் மனோரமா தேவி என்பவரால் தொடரப்பட்டது. ஆயினும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் முழு அளவில் இயங்கத் தொடங்கியது. அதுவரை அதிகம் அறியப்படாமல் இருந்த இந்த நிறுவனம் பெண்களுக்கு ஊறுகாய் செய்யப் பயிற்சி அளித்து விற்பனை செய்து வந்தது.
கடந்த 2009 ஆம் வருடம் இந்த தொண்டு நிறுவனம் ஓர் கூட்டுறவு வங்கியை அமைத்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு எதிராக இயங்கி வந்தது அதன்பிறகு மனோரமாவுக்கு ஆளும் கட்சியினரின் ஆதரவு அதிகரித்தது. பாகல்பூர் மாவட்ட நீதிபதிகள் பொதுமக்கள் வரிப்பணத்தை இந்த வங்கிக் கணக்கில் செலுத்தத் தொடங்கி அது வருடக்கணக்கில் தொடர்ந்தது.
முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியும் மாவட்ட நீதிபதியுமான ராமையா பொதுமக்களின் வரிப்பணத்தை இந்த வங்கியில் செலுத்தியதுடன் இந்த வங்கியின் அலுவலகம் இயங்க இட வசதியை அளித்தார். இதனால் பலரும் இந்த நிறுவனம் அரசு நிறுவனம் என எண்ணத் தொடங்கினர். நிதிஷ் குமார் அரசு மனோரமா தேவிக்கு விருதுகள் வழங்கின. இந்த தொண்டு நிறுவன அலுவலகத்துக்குத் துணை முதல்வர் சுஷில் மோடி மற்றும் அமைச்சர் கிரிராஜ் உள்ளிட்ட பலரும் சென்று வந்தனர்.
இந்நிலையில் அரசு நிதியை ஸ்ரீஜன் தொண்டு நிறுவனத்துக்கு அளித்ததாகப் புகார் எழுந்து அந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு மனோரமா தேவி மரணம் அடைந்தார். அவர் மீதும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப் பதியப்பாட்டது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்த அனில்குமார் மற்றும் அவர் மனைவி ரஜினிபிரியா தலைமறைவானார்கள் இவர்கள் மனோரமா தேவியின் மகனும் மருமகளும் ஆவார்கள்.
இந்நிலையில் சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தின் வங்கியில் அரசு பணத்தை முதலீடு செய்தவர்களில் ராமையா இரண்டாம் நபர் ஆவார் முதலாமவர் பீகார் அரசின் ச்மூக நலத்துறை சிறப்பு செயலரான பிரேந்திர குமார் ஆவார்.
இந்த குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும் ராமையாவின் பெயர் சேர்க்கப்பட்டது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ராமையா மிகவும் வேண்டியவராக உள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவர் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் ராமையா ரூ.3.50 கோடி பொது மக்கள் பணத்தை ஸ்ரீஜன் மகிலா விகாஸ் சமிதி வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும் அரசு இடத்தை இந்த நிறுவனம் இயங்க அனுமதி அளித்ததாகவும், நிறுவனத்தின் கடைகளை பாகல்பூர் சபவுர் பிளாக் அலுவலக வளாகத்தில் இடம் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள இந்த வேளையில் அக்கட்சியின் உறுப்பினர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையால் பீகார் மாநில ஆளும் கட்சி மீது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.