நெதர்லாந்து

கொரோனா தாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகளை ஒரு ஆய்வு முடிவு  அறிவித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நேற்று வரை 1.50 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு 6.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  பாதிப்பு மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.   அதற்கு அடுத்ததாகப் பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.  நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிளோஸ் மெடிசின் என்னும் ஊடகம் ஒரு ஆய்வை நடத்தி உள்ளது.  இதில் கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வரும் வழிகள் குறித்த ஆய்வு நடந்துள்ளது.   இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.  இந்த ஆய்வு நெதர்லாந்து நிலைமையைக் கொண்டு நடத்தப்பட்ட போதிலும் பல நாடுகளுக்குப் பொருத்தமாக உள்ளது.

இந்த ஆய்வில், “சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைரஸ் தாக்கம் 50% அளவுக்கு மேல் குறையும்.  ஆனால் பொது மக்கள் இதற்குச் சரியான ஒத்துழைப்பு அளிப்பதில்லை.   மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் அவர்கள் காட்டும் தாமதம் பாதிப்பை அதிகரிக்கிறது.  அரசு முழு ஊரடங்கை அறிவித்தாலும் யாரும் தனிப்பட்ட  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனில் பாதிப்பு மிக வேகமாக அதிகரிக்கும்.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து முழுவதுமாக அழிக்க மூன்று நடவடிக்கைகள் அவசியமாகும்.

முதலில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் அரசு கண்டிப்பாக இருப்பதுடன் இது குறித்த புரிதலை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  மக்களுடைய புரிதல் இன்மை கொரோனா தாக்கத்தை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.  எனவே மக்கள் தங்களுக்கு தாங்களே சமூக இடைவெளி குறித்துக் கட்டுப்பாடு விதித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கைகளைக் கழுவுதல் முக்கிய இடம் பிடிக்கிறது.  மக்களில் குறைந்தது 90% பேர் கைகளைக் கழுவுவதில் தீவிரமாக இருந்தால் அது சமூக இடைவெளியைப் பின்பற்றாததில் 25% வரை ஈடு செய்யும்.  ஆனால் அதையும் மீறி ஆங்காங்கே பரவுதல் ஏற்படலாம்.  அவை மிகவும் குறைவானதாகவே காணப்படும்.   கைகளை கழுவ வசதி இல்லாத இடங்களில் சானிடைசர் பயன்படுத்தலாம்.

மூன்றாவதாக அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டியது மிக மிக முக்கியமாகும்.  வெளியில் செல்வதாக இருந்தாலே முகக் கவசம் இன்றி வெளியே செல்லக்கூடாது என்பதில் மக்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  சிறிய தூரம் செல்லும் போது பலர் முகக் கவசம் அணிவதை த்விர்க்கின்றன்ர்.  அது சரியான நடவடிக்கை அல்ல.  முகக் கவசம் அணிவதை நாம் அடுத்த, நான்கும், ஆறு, எட்டு, பன்னிரண்டு வாரங்கள் என அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பரவுதல் முழுவதுமாக நின்று விடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது