பெங்களூரு :
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மணிக்கு 300 கி. மீ. வேகத்தில் பைக் ஓட்டிய வாலிபர் கைது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டிருந்தாலும், ஆபத்தை உணராத இளைஞர்கள் பலர் கொரோனா வைரஸ் பார்ட்டி உள்ளிட்ட பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில், பெங்களூரு நகரின் முக்கிய பகுதியான எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள 10 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தில் யமஹா ஆர்-1, 1000 சி.சி. பைக்கில் இளைஞர் ஒருவர் கிட்டத்தட்ட 300 கி.மீ. வேகத்தில் சென்று, அதனை படம் பிடித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
நான்கு வழி சாலையான இந்த மேம்பாலத்தில், பேருந்து, ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருக்க இந்த விபரீத சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். பல வாகனங்களை 200 கி.மீ. வேகத்தில் முந்திச்சென்றுள்ளார்.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையிலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வகையிலும் அதி வேகத்தில் அலட்சியமாக பைக் ஓட்டிய அந்த இளைஞரை அவரது சமூக வலைதள பக்க தொடர்புகளை கண்டறிந்து பெங்களூரு போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள வாலிபரின் பெயர் முனியப்பா என்று மட்டும் தெரிவித்திருக்கும் போலீசார் அவர் மீது எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிவிக்கவில்லை.
இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பெங்களூரு நகர காவல் துறை குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல், சாகசத்திற்கு பயன்படுத்திய யமஹா ஆர்-1, 1000 சி.சி. பைக்கை பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.