சென்னை:
கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு  நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு தமிழகஅரசு ரூ.1000 நவாரணம் வழங்கி வருகிறது. அதே வேளையில், நல வாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கு நிவாரணம் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.
இதைய எதிர்த்து, பெறாதவர்களுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த விசாரணையின்போது,  தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், நலவாரியத்தில் புதுப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பாரம்பரிய கலைஞர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி பேசிய நீதிபதிகள்,

கொரோனா பொது முடக்கம் காரணமாக, பாரம்பரிய கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும், கோவில் திருவிழாக்கள்,  திருமண நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தால்,  நாதஸ்வரம், தவில் வித்வான்கள் உள்பட பாரம்பரிய இசைக் கலைஞர்கள் கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றனர்.  ஏற்கனவே  நலிந்த கலைஞர்களான அவர்கள்,  இந்த பேரிடர் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழகஅரசு, நடைமுறைச் சிக்கல்களை மட்டுமே காரணம் காட்டி  பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என வேதனை தெரிவித்தனர்.
பின்னர், அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்திற்காக விசாரணையை வரும் ஜூலை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.