சென்னை

சென்னை நகரில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைந்து 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகச் சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை  குறைந்து வருகிறது.   ஒரே நாளில் 2 ஆயிரத்தை எட்டிய கொரோனா தொற்று தற்போது ஆயிரத்துக்குச் சற்று அதிகமாக உள்ளது.  இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கணக்கெடுப்பு குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த அதிகாரி, ”சென்னையில் 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   ஆகவே கடந்த ஒரு வாரத்தில் திருவொற்றியூர் மண்டலத்தில் 2.7 சதவீதம், மாதவரத்தில் 3.4 சதவீதம், தண்டையார்பேட்டையில் 1.9 சதவீதம், ராயபுரத்தில் 3.27 சதவீதம், அம்பத்தூரில் 0.9 சதவீதம், தேனாம்பேட்டையில் 2.8 சதவீதம், கோடம்பாக்கத்தில் 4 சதவீதம், வளசரவாக்கத்தில் 0.7 சதவீதம் என கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

ஆயினும் மணலி மண்டலத்தில் 3.7 சதவீதம், திரு.வி.க.நகரில் 8.4 சதவீதம், அண்ணாநகரில் 0.9 சதவீதம், ஆலந்தூரில் 5 சதவீதம், அடையாற்றில் 1 சதவீதம், பெருங்குடியில் 6.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.9 சதவீதம் எனப் பாதிப்பு அதிகரித்துள்ளது.   ஆகவே இந்த பகுதிகளில் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.