அயோத்தி:
த்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க, அறக்கட்டளை விடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு, ‘அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் அமைத்தது.

அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான முதல் கட்ட பணிகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. சர்ச்சை ஏற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த தற்காலிக ராமர் கோவில், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தவும், அறக்கட்டளை முடிவு செய்தது. இது தொடர்பாக, அயோத்தி ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், அயோத்தியில் நடந்தது.

இது பற்றி, அறக்கட்டளை உறுப்பினர் கோவிந்த கிரி மஹராஜ் கூறியதாவது: அயோத்தியில், ஆக, 5ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினால், அதில் பங்கேற்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி, ஆக., 5ம் தேதி, அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில், ஆக., 5ம் தேதி, காலை, 11:௦௦ மணி முதல் மதியம், 1:10 மணி வரை, மோடி நேரம் ஒதுக்கி இருப்பதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனால், அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன் நடத்தப்பட வேண்டிய பூஜைகள், 5ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியிலிருந்து, வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.