சென்னை:
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 403 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 49 பேர் நலமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் தொடர் முழு ஊரடங்கு, கட்டுப்பாடு காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று ஆயிரத்து 219 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் கொரோனாவில் இருந்து ஆயிரத்து 116 பேர் நலம் பெற்றதன் மூலம் இதுவரை 68 ஆயிரத்து 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிற மாவட்டங்களை பொறுத்தவரையில், செங்கல்பட்டில் 323 பேரும், மதுரையில் 185 பேரும், திருவள்ளூரில் 370 பேரும், விருதுநகரில் 179 பேரும், தூத்துக்குடியில் 189 பேரும், வேலூரில் 191 பேரும், தேனியில் 144 பேரும், சிவகங்கையில் 176 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு:
காஞ்சிபுரத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,512 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,348 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,105 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கொரோனா பாதிப்பு:
திருவண்ணாமலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,774 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 16 கர்ப்பிணிகள், 9 சுகாதார பணியாளர்கள் பாதிப்பு – மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,379 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் – 1065-ஆக இருக்கிறது.