கடலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோ வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என முன்களப் பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
அதே போல, கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கவும் நிவாரணப் பணிகளில் களத்தில் செயல்பட்டுவரும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக இடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் முதலில் பலியானார்.
இதனைத் தொடர்ந்து, திமுகவில் செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதே போல, அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன், உயர்க்கல்வித்துறை அமைச்சரும் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.பி.அன்பழகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 2 அமைச்சர்கள் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.