வாஷிங்டன்: பிரபலமான டெல்டா விமான நிறுவனத்தின் பணியாளர்கள் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பிரபலமான விமான நிறுவனம் டெல்டா விமான நிறுவனம். உலகம் முழுவதும் பல நாடுகளில் விமான சேவையில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் அதில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்டியன் கூறி இருப்பதாவது: எங்களிடம் 500 ஊழியர்கள் உள்ளனர், அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
பெரும்பான்மையானவர்கள் மீண்டு வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் 10 ஊழியர்களை நோயால் இழந்துவிட்டோம். நாங்கள் எங்கள் ஊழியர்கள் அனைவரையும் பரிசோதிக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தோம். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாங்கள் எங்கள் மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க முடியும் என்றார்.
அந் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உலகம் முழுவதும் உள்ள 90000 ஊழியர்களுக்கும் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு குறைவான விகிதத்தில் கொரோனா தொற்று உள்ளது என்றார்.