ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை  ரயில் முன் பாய்ந்த சிறுவன்…
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் தற்போது பிளஸ் 1 வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 வகுப்பு செல்கிறார். தந்தையை இழந்த இவரை அவரது தாயாரான காஞ்சனா என்பவர் தான் கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கத் தனியார் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும் நடவடிக்கை மேற்கொண்டன. அதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குப்  புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதீப் தனது அம்மாவிடம் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தருமாறு அடம் பிடித்துள்ளார்.
அதற்கு அவரது தாயார் தற்போது சாப்பாட்டிற்கே மிகவும் சிரமப்பட்டுத்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் மொபைல் வாங்க முடியாது. கண்டிப்பாக அம்மா சில காலங்கள் சென்றதும் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனைப் புரிந்து கொள்ளாத பிரதீப் மன விரக்தி அடைந்து கடந்த 12ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின் ரயில் நிலையத்தில் இருந்த அவரை அவரது நண்பர்கள் சமாதானப்படுத்தி வீட்டிற்குக் கூட்டி வந்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் நேற்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பிரதீப் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது அவரது தாயாரும் உறவினர்களும் அவரை தேட ஆரம்பித்தனர். பின் அவர் காணாமல் போய்விட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சிறுவன் ஒருவன் உயிரற்று கிடப்பதாகக் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடலைப் பரிசோதனை செய்கையில், அது காணாமல் போன பிரதீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் அவரது தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் கல்வியைப் பெறப் பல குடும்பங்களில் வசதி இல்லாததன் காரணமாகத்தான் அரசு தொலைக்காட்சி வாயிலாகப் பாடம் நடத்துவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனியார்ப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வசதி இல்லாதவர்கள் ஆன்லைன் கல்விக்கு என்ன செய்வார்கள்? அப்படியான மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அதில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
– லெட்சுமி பிரியா