கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க தனியாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார்.
கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்கு என்று செயல் பட்டு வரும் பிரத்யேக கண்காணிப்பு மையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அவர் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, முதற்கட்டமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல், அவர்கள் சார்ந்த பகுதிகளில் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தொடர் தொற்றுகள் கண்டறியப்படும் பகுதிகளை கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து தனிமைப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொடிசியா வளாகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போது 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய தனிபிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநபர்கள் யாரும் நுழையாத வண்ணம் முறையாக கண்காணிக்கப் பட்டு வருகிறது என்று கூறினார்.