தூத்துக்குடி:
சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில், மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவருரையும் விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர், அவர்களை சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தனர்.
இதனைக் கண்டித்து வியாபாரிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையும் தானாகவே முன்வந்து அதிரடி விசாரணையை மேற்கொண்டது. சிபிஐ பொறுப்பேற்கும் வரை சிபிசிஐடி விசாரணையை தொடங்க உத்தரவிட்டதுடன், காவல்நிலையத்தை தாசில்தார் கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்து, தயடங்களை அழிக்காதவாறு நடவடிக்கை எடுத்தது.
இதைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தந்தை மகன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால், அவர்கள்மீது கொலை வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர், வழக்கில் தொடர்புடைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பணியிடை நீக்கப்பட்டனர். அதுபோல, நீதித்துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 11 பேர் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை, தங்களது கையில் எடுத்துள்ள சிபிஐ, விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது. திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணையை துரிதப்படுத்தி வரும் சிபிஐ குழுவினர், சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் சென்று, உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி காவல்துறையினரால், சிபிஐ வசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீதமிருந்த ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், சிபிஐயிடம் ஆவணங் களை ஒப்படைத்தார். இந்த வழக்குத் தொடர்பாக பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தனி அறையில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.