சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. சிறையைவிட்டு வெளியே வந்ததும், அதிமுகவில் தனது வலிமையை நிலைநாட்டுவார் என அவரது தீவிர ஆதரவாளர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவுக்கு அதிமுகதலைமை பதவியை விட்டுத்தர, அதிமுக அமைச்சர்களில் சிலரும், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கவே கூடாது வேறு பலரும் வரிந்துகட்டி வருகின்றனனர். இந்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர்களிடையே ஏற்பட்டுள்ள சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த சசிகலா, அவரது மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வர் பதவியை, ஓபிஎஸ் வசம் இருந்து கைப்பற்ற முயற்சித்தார். இதனால் கட்சியும் பல துண்டுகளாக உடைய, சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார். இதையடுத்து, சசிகலா ஆதரவுடன் தமிழக முதல்வராக எடப்பாடி பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
தற்போது சிறை வாழ்க்கை முடிந்து வெளியே வரும் சசிகலா மீண்டும் தமிழக அரசியலை கலக்கு வார் என தகவல்கள் பரவி வருகின்றன. அவரது வருகையே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக தலைவர்களுக்குள் இப்போதே ஜால்ரா கோஷம் எழும்பத் தொடங்கி உள்ளது.
சிலர், சசிகலாவுக்கு அதிமுகவில் தலைமை பதவி வழங்க வேண்டும் என எடப்பாடியிடம் வலி யுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே வேளையில் சில மூத்த அமைச்சர்கள், மன்னார்குடி மாஃபியா குடும்பத்தினரை கட்சியிலேயே சேர்க்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர். அதிமுகவில் நடைபெற்று வரும் இந்த உள்கட்சி களேபரம், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தயவுடன் தேர்தலை சந்திக்க உள்ள பாஜக, சசிகலாவை பகடைக்காயாக பயன்படுத்தி, உடைந்த அதிமுக ஒன்றிணைத்து, திமுகவுக்கு போட்டியாக தமிழக தேர்தல் களத்தில் குதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபகால தமிழக அரசியல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ் (சசிகலாவை எதிர்த்து ஜெ. சமாதியில் மவுனவிரதம் இருந்து கட்சியை உடைத்தவர்) “சசிகலாவைக் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அதிமுக கட்சியில் இருந்து பொதுக்குழு நீக்கியது. எனவே அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து இது குறித்து முடிவு செய்வார்கள். அதுவே சரியான முடிவாக இருக்கும்.” எனத் தெரிவித்திருந்தார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்திய, தஓபிஎஸ் தற்போது சசிகலா விஷயத்தில் மென்மையாக நடந்துகொள்வது அரசியல் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தது.
தமிழகத்தில் தற்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஆயுட் காலம் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
அதுபோல, சசிகலாவின் 4 ஆண்டு சிறைத்தண்டனையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் முடிவடைய வுள்ளது.
ஆனால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கில், அவரை சிறையில் இருந்து வெளிக்கொணர ஒரு தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சசிகலாவும் அதிமுகவையை கைப்பற்ற விரும்புவதாகவும், இதன்மூலம் தமிழக அரசியல்களத்தில் குதிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
சசிகலாவின் சிறைநன்னடத்தையை (சிறை அதிகாரிகளுக்கு பணம் வாரியிறைத்து, சிறையில் இருந்து வெளியே வந்து ஊர் சுற்றியது) காரணம் காட்டி, பாஜக தயவுடன் அவரை, முன்னதாகவே சிறையில் இருந்து விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பாஜக ஆதரவுடன் டிடிவி தினகரன் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக அமைச்சர்களும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை கூறி தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கி வருகின்றனர்.
சசிகலாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என தலைமைதான் முடிவு செய்யும் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பகிரங்கமாக சசிகலாவை அதிமுகவிற்கு வரவேற்பதாக கூறியிருந்தார்.
ஆனால், அதிமுக மூத்த அமைச்சரான ஜெயக்குமாரோ, சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவிலும் இடமில்லை, அரசாங்கத்திலும் இடமில்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.
சசிகலாவுக்கு அண்ணா தி.மு.க.வில் இடமில்லை. நேற்று எடுத்த முடிவு, இன்று எடுத்த முடிவு; நாளை எடுக்கும் முடிவு. எனவே சசிகலாவையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ கட்சியிலும் ஆட்சியிலும் சேர்க்க கூடாது என்பது தான் எங்களது லட்சியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் புயலை கிளப்புகிறதோ இல்லையோ, அதிமுகவில் மீண்டும் புயலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. சசிகலாவை வரவேற்க சில அமைச்சர்கள் தற்போதே தயாராகி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சில அமைச்சர் களும் தற்போதே காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக அமைச்சர்களுக்குள் மதுரை மண்டலம், கொங்கு மண்டலம் என இரு கோஷ்டிகள் தனித்தனியாக செயல்பட்டு, தங்களது வீர தீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்போது சசிகலா விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
கொரோனா பரபரப்புக்கு இடையேயும், அதிமுகவில் நடைபெற்று வரும் உள்கட்சி அரசியலும் உச்சமடைந்து வருகிறது.
20201ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக முழுமையாக இருக்குமா அல்லது, தேர்தல் கமிஷனால் மீண்டும் முடக்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்..