சென்னை
சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை அவரே மறுத்துள்ளார்.
சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஜன்னல் கடை மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மயிலை கபாலி கோவி அருகில் உள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் இந்த கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சந்திரசேகரன் கொரோனா தொற்றால் உயிர் இழந்ததாகத் தகவல்கள் வந்தன. அது பொய் என அவரே மறுப்பு தெரிவித்துள்ளார்
சந்திரசேகரனின் இளைய சகோதரர் ஆன சிவராமகிருஷ்ணன் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் தணிக்கையாளராகப் பணி புரிந்து வருகிறார். இவர் பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் காலை மாலை வேளையில் சகோதரர் கடையில் உதவி செய்து வந்தார்.
இவருக்கு கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு திடீர் என மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் இருந்துள்ளது. இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 ஆம் தேதி அதிகாலை இவர் மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து இவர் உடலை மயிலாப்பூர் சுகாதாரத் துறையினர் அடக்கம் செய்தனர். ஊடகங்களில் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன் உயிர் இழந்ததாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த சந்திரசேகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சந்திரசேகரன், ”நான் உயிர் இழக்கவில்லை, நலமாக உள்ளேன். எங்களுக்கு உறுதுணையாக இருந்த சகோதரரின் மரணம் கடும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல் குடும்பத்தினருக்கு மேலும் சோகத்தை உண்டாக்கி உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகு நாங்கள் மீண்டும் கடையைத் திறக்க எண்ணியுள்ளோம்” என அறிவித்துள்ளார்.