மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க அ.தி.மு.க, முடிவு
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், ஆளும் அ.தி.மு.க. தேர்தலை எதிர் கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகிறது.
அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர். வைத்தியலிங்கம், அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன் ஆகிய 5 பேரும் அண்மையில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், கட்சியை புனரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக வசதிக்காக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க.வில் தற்போது 56 மாவட்டங்கள் உள்ளன. 56 மாவட்டச் செயலாளர்களும் உள்ளனர்.
இந்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 64 ஆக உயர்த்த, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
-பா.பாரதி.