சென்னை

சென்னையில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளதால் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் அனைத்து தொழிலகம், அலுவலகங்கள், உள்ளிட்டவை மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பெரிதாகக் குறைந்தது.   ஊரடங்கில் சென்ற மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஜூன் 5 முதல் இந்த ஊரடங்கு முடிவடைந்து மீண்டும் சென்னை இயங்கத் தொடங்கியது.  இதையொட்டி கடந்த இரு தினங்களாகச் சென்னை ஈண்டும் சுறுசுறுப்பை அடைந்துள்ளது.   தி நகர் மற்றும் பிராட்வே போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காலையில் இருந்தே தொடங்கி உள்ளது.  குடியிருப்பு பகுதிகளிலும் தேநீர்க்கடைகள் மற்றும் பேக்கரிகளில் கூட்டம் கூடத் தொடங்கியது

முக்கிய சாலைகளான அண்ணா சாலை, ஈவெரா சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பேசின் பிரிட்ஜ் சந்திப்பு ஆகிய இடங்களில் வெகு நேரம் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.  எனவே இந்த பகுதிகளில் கூடுதலாக காவல்துறையினர்  பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.   மேம்பாலங்களில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நீக்கப்பட்டன.

வாகன ஓட்டிகளில் பலர் முகக் கவசம் அணிந்திருந்த போதிலும் தலைக்கவசம் அணியாமல் பலரும் இருசக்கர வாகனங்களை ஓட்டினார்கள்.  காவல்துறையினர் முகக் கவசம் அணியாதவர்களைப் பிடித்தது போல் தலைக்கவசம் அணியாதவர்களைக் கண்டு கொள்ளவில்லை.   மைக்குகள் மூலம் காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்வோருக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

திநகர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் கடைகளில் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் கடை பணியாளர்களுக்கு வேலைப்பளு மிகவும் அதிகரித்துள்ளது.   அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் பகுதிகளிலும் வர்த்தகம் மும்முரமாக நடந்துள்ளது.   கடந்த இரு தினங்களாக இங்குள்ள கடைகளில் ஏராளமானோர் வந்து பொருட்களை வங்கி சென்றுள்ளனர்.

அதே வேளையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி மொத்த வியாபார சந்தையில் 10% பேர் மட்டுமே காணப்பட்டனர்.   இதனால் பல கடைகள் மூடப்பட்டிருந்தன.   இதைப் போல் காசிமேடு மீன் பிடி துறைமுகம் மற்றும் புளியந்தோப்பு மிருகம் வெட்டுமிடம் ஆகியவை மூடப்பட்டிருந்ததால் இங்குள்ள பணியாளர்கள் இவற்றைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.