மும்பை: அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதில் தலைகீழ் முயற்சிசெய்துவரும் மோடி அரசு, அந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறப்புவாய்ந்த மற்றும் விலைமதிப்பில்லாத ஓவியங்கள் மற்றும் சிறபங்களை இன்னும் மதிப்பிடாமல் அல்லது அட்டவணைப்படுத்தாமல் வைத்துள்ளது என்ற அதிர்ச்சி செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்தின் மகுடமாக கருதப்படுவது ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மொத்தமாக சேர்த்து மொத்தமாக ரூ.60074 கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, இதை சாக்காக வைத்து, இந்நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு விற்றுவிட பெரும் முயற்சி செய்துவருகிறது மோடி அரசு. ஆனால், அதன் முயற்சி இதுவரை கைக்கூடவில்லை.
ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான அற்புதமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மட்டும் 8000 வரை உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில், எம்.எஃப்.ஹுசேன், வி.எஸ்.கெய்ட்டோன்டே, கே.எச்.ஆரா மற்றும் கிஷென் கண்ணா உள்ளிட்ட பிரபலங்களின் ஓவியங்களும் அடக்கம்.
ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் ஏலம் விடப்படுகையில், இந்த விலைமதிப்பற்ற படைப்புகளின் நிலை என்ன என்ற வினாவும், அவையும் சொத்து மதிப்பாக சேர்க்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஆர்டிஐ பதியப்பட்டது. அந்த ஆர்டிஐ பதிவுக்கு அளிக்கப்பட்ட வினாவில், அந்த கலை சொத்துக்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை அல்லது அட்டவணைப்படுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.