கோவை:
கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில்,  12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால்,  பைக்கில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவ்ம பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மாவட்ட நிர்வாகத்தின் அவலத்தையும் தோலூரித்து காட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 197 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 124 பேர் சிகிச்சையில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர். 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்,  திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த  59 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய,  108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்து அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வராததால், பல முறை தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளார். ஆம்புலன்ஸ் வரும் என்று தெரிவித்த நிலையில், அவரும் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தார்.
இதையடுத்து,  வேறு வழியில்லாமல் தனது மகனின் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையை அடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டதில், அவர்  இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுகாதார பணியாளாராக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர்  விஜய கார்த்திகேயன், இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.