மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மின் கட்டணத்தை மாதத் தவணையில் செலுத்தலாம் என அதானி மின் நிறுவனம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை அதானி மின் நிறுவனம் நடத்தி வருகிறது. ஊரடங்கு காரணமாக மின்சார பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தாமல் இருந்து தற்போது மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் வாடிக்கையாள்ரக்ள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அதிக அளவில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மின் கட்டண பாக்கியைச் செலுத்த முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். இது குறித்து அதானி மின் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், “மின்கட்டணம் அதிகமாக இடப்பட்டுள்ளது என்பது தவறாகும். வாடிக்கையாளர்கள் எங்களது இணைய தளத்தில் அவர்கள் விவரங்களை அளித்து அவர்கள் மின் பயன்பாடு மற்றும் கட்டண விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். தற்போது மீட்டரில் காட்டும் பயன்பாடு பில்லில் உள்ளதை விட அதிகமாக இருந்தால் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகப் பொருள் ஆகும்.
மேலும் இது குறித்து விளக்கம் அளிக்க 25 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களிடம் வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தற்போது ஊரடங்கு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது.
தற்போது மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெப்ப நிலை, மற்றும் வீட்டில் இருந்து பணி புரிவதால் மின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கான இ பில் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் மின் கட்டண பாக்கியை மாதத் தவணை மூலம் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.