டில்லி
கொரோனா தாக்கம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் 50% குடும்பங்களில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகெங்கும் மக்களைக் கடுமையாகப் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு மொத்தம் 6.05 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 17848 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர மார்ச் 25 முதல் அமலில் உள்ள ஊரடங்கால் பலரது வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இது குறித்து சிஎன்பிசி மற்றும் டிவி18 இணைந்து ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தி உள்ளது. நாடெங்கும் உள்ள ஆண்கள், பெண்கள் என பலதரப்பட்ட வயதினரிடையே நடந்த இந்த கருத்துக் கணிப்பில் 10,125 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் சுமார் 50% குடும்பங்கள் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் 30% ஊதிய வெட்டு, 19% வேலை இழப்பு மற்றும் 23% தற்காலிக விடுப்பு ஆகும். ஊதிய வெட்டு பெற்றோரில் 56% பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். இதைப் போல் வேலை இழந்தோரில் 47% பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.
மொத்தத்தில் 30% பேர் இன்னும் 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த பொருளாதார பாதிப்பு தொடரும் எனக் கூறி உள்ளனர். 28% பேர் இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்நிலை தொடரும் எனக் கூறுகின்றனர். மொத்தமுள்ளோரில் 67% பேர் வேலை இழப்பு, ஊதிய வெட்டு மற்றும் தற்காலிக விடுப்பு காரணமாக கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
பொருளாதார பாதிப்பு குறித்து ஆண்களில் 61% பேர் அதிகம் கவலை கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்
செலவுகளை பொறுத்தவரை 82% பேர் தங்கள் செலவுகளைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர்களில் 37% பேர் மிக அதிக அளவில் செலவுகளைக் குறைத்துள்ளனர். இவர்களில் 85% பேர் ரூ.10 லட்சத்துக்குக் குறைவான வருட வருமானம் பெறுபவர்கள் ஆவார்கள். அதிக செலவுகளில் 57% மளிகை மற்றும் மருந்துக்குச் செல்கையில் 25% மது மற்றும் துணிமணிகளுக்குச் செலவாகிறது.
சுமார் 63% பேர் பெரிய மின்னணு பொருட்கள் மற்றும் ஃபர்னிச்சர்களை வாங்குவதைத் தள்ளிப்போட உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிப்புற செலவுகள் குறித்த கேள்விகளுக்கு 40% பேர் விடுமுறை மற்றும் சுற்றுலாவைத் தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள 60% பேரில் திரைப்படங்கள், ஷாப்பிங், வெளியில் உணவு அருந்தல், அழகு நிலையங்கள் எனச் சமமாக தேர்வு செய்துள்ளனர்.