கணக்கு
சிறு கதை
◆ பா.தேவிமயில்குமார் ◆
“தேனமுது அக்கா இந்த கணக்கை முடித்துத்தாருங்கள், இந்த அறையில் இருப்பவர் உடனே காலி செய்கிறாராம்” என ரூம் பாய் வந்து நின்றார்.
“உடனே தருகிறேன், சற்றுப் பொறு” என்று வேலை முடித்து கிளம்பும் நேரத்தில் கூட எந்த வித பிசகும் இல்லாமல் ரசீது தயாரித்து கொடுத்தாள்.
தேனமுது சேலம் மாநகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கணக்காளராகப் பணிபுரிகிறார்.
தான் படித்த படிப்பிற்கு இன்னேரம் பன்னாட்டு நிறுவனத்தில், லட்சக் கணக்கில் சம்பளம் வாங்க வேண்டியவள் வயதான தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள அதனையெல்லாம் உதறிவிட்டு பெற்றோரை அருகிருந்து கவனித்துக் கொள்கிறாள்.
தேனமுதுவிற்கு வயது இருபத்தைந்தை நெருங்கப்போகிறது, தேனமுதுவின் பெற்றோர் கணேசன், சுசீலா இருவரும் நீண்ட நாள் குழந்தையில்லாமல் இருந்து பிறகு பிறத்தவள் தான் தேனமுது என வீட்டில் அடிக்கடி கூறுவார்கள்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தேனமுதுவிற்கு வரன் பார்க்கிறார்கள், இதுவரை எதுவும் அமையவில்லை. ஒரே பெண் இருபத்தைந்து பவுன் நகை, வீடு, மனை உண்டு, என தரகரிடம் கூறி இருந்ததால், வரும் வரன்கள் எல்லாம், வீடு, நகைகளைப் பற்றியேக் குறியாக இருந்தார்கள், இது தேனமுதுவிற்குப் பிடிக்கவில்லை, தன்னுடைய தாய், தந்தையைக் கடைசி வரை தன்னுடன் வைத்திருக்கும் திட்டத்தை வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறி விட்டால் அவ்வளவுதான், வந்த வரன் எதுவும் திரும்ப வராது.
பல நாட்கள் கழித்து ஒரு வரன் வந்தது, அதுபோது மாப்பிள்ளையைத் தரகர் கையோடு அழைத்து வந்து விட்டார், மாப்பிள்ளை பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக நாகரீகமாக இருந்தார். ஆனால் அவர் மட்டும் தான் வந்திருந்தார் அவருடன் குடும்பத்தார் யாரும் வரவில்லை.
தேனமுது காபி கொடுத்த பின் அனைவரும் அமர்ந்துப் பேச ஆரம்பித்தனர்.
“ஏனப்பா தரகரே எதுவும் சொல்லாமல் இந்தத் தம்பியை திடீர்னு அழைச்சிட்டு வந்துட்டிங்க” என்றார் கணேசன்.
“இல்லை ஐயா, தம்பிதான் நேரில் போய் பேசிக் கொள்ளலாம் அப்படின்னு சொல்லிட்டார், அதான் கூட்டிட்டு வந்துட்டேன்.”
“என்ன தம்பி பண்றீங்க?”
“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை, இப்போது சேலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகத்திற்கு வேலை கிடைத்து வந்துள்ளேன், மாதம் சம்பளம் அறுபதாயிரம் ரூபாய்” எனக் கூறினான்.
“சாரிப்பா, உங்கப்பேரை நான் கேட்கவேயில்லை”
“என் பெயர் நந்திவர்மன்“
“உங்கள் அப்பா, அம்மா” என கணேசன் கேட்டதற்கு தரகர் முந்திக் கொண்டு.
“அவர்கள் இருவரும் இவர் சிறு வயதாக இருக்கும் போதே சாலை விபத்தில் இறந்து விட்டார்கள்” எனக் கூறினார்.
“வேண்டாம், தரகர் ஐயா, இவர்களிடம் உண்மையைக் கூறி விடுவோம், பொய் வேண்டாம்” என்று நந்திவர்மன் கூறினான்.
“அய்யா, என்னைப் பெற்ற ஓரிரு நாளில் அனாதை இல்லத்தில் என் தாய் போட்டு சென்றது மட்டும் தான் எனக்கு அந்த இல்லத்தில் கூறினார்கள். அதனால் எனக்கு தாய், தந்தை, நான் பிறந்த ஊர், சொந்த ஊர், சொந்த பந்தம், என எதுவுமே எனக்குத் தெரியாது, மொத்தத்தில் நான் யாரு மற்றவன்” எனக் கோர்வையாக அதே சமயம் நிதானமாக கூறினான்.
“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையா” என சுசீலா அம்மாள் கேட்டபோது
“இதோ அந்த இல்லத்தின் முகவரி மற்றும் போன் நெம்பர், அங்கு கேட்டுக் கொள்ளுங்கள். நான் படித்தது, வேலைக்கு வந்தது எல்லாமே தாய் தந்தையர் இல்லாதவர்க்கான இட ஒதுக்கீட்டில் தான், எனக்கென்று யாருமில்லை, குடும்பமாக வாழ ஆசை அப்போது தான் உங்கள் பெண்ணின் விருப்பம் தெரிந்து, இங்கு வந்தேன் எனக்கு மனைவியோடு, தாய், தந்தையரும் கிடைத்ததால் மகிழ்ச்சி, பதில் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை தரகரிடம் கூறிவிடுங்கள் நன்றி வருகிறேன்” என எழுந்து சென்றான்.
அன்று இரவு மூவரும் எதுவும் பேசாமல் படுத்து விட்டனர், ஆனால் ஆளுக்கொரு யோசனையில் நீண்ட நேரம் தூங்கவில்லை.
காலை எழுந்ததும் கணேசன், சுசீலா மற்றும் மகளிடம், “இந்த வரன் நமக்கு வேண்டாம், ஏனென்றால் பெற்றோர், சொந்த பந்தத்துடன் பார்த்து வைக்கும் திருமணத்திலே ஏதாவது ஒரு பிரச்சினை என்றாலே தீர்க்க முடிவதில்லை இதில் இந்த வரனுக்கு யாருமில்லாத போது எதை நம்பித்தருவது, நாம் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நம் மகளின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடக்கூடாது” என முடித்துவிட்டார்.
“நான் என்ன சொல்றேன்னா, நாளைக்கு நம்ம சொந்த பந்தத்திடம் திருமணத்தின் போது இவரை எப்படி அறிமுகப்படுத்துவது? நம் உறவினர் நம்மை பின்புறம் பேசி காரித்துப்புவார்களே ஒரே ஒரு நல்லது என்னவென்றால் நல்ல வேலையில் உள்ளார், அதற்காக ஊசித் தங்கம் என்பதற்காக கண்ணில் குத்திப்பார்க்க முடியுமா? அதனால் நானும் இதனை வேண்டாம் என சொல்கிறேன்” என சுசீலா முடித்தார்.
அதுவரை அமைதியாக இருந்த தேனமுது, “அம்மா, அப்பா, எத்தனையோப் பெரும் பணக்காரர்கள், வேலையில் இருப்பவர்கள் என்னைப் பெண் கேட்ட போது நீங்கள் சம்மதம் சொன்னீர்கள், ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என சொன்னவுடன் அதற்கு மேல், என் விருப்பம் என விட்டு விட்டீர்கள், நான் ஏன் வேண்டாம் என்று சொன்னேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?
அதற்கு ஒரே காரணம், அவர்கள் உங்களை கூட வைத்துக் கொள்ள விரும்பாதவர்கள், சுருக்கமாகச் சொன்னால் அவர்களின் ‘கணக்கு’ வேறு, அதாவது என் பெயரில் இருக்கும் வீடு, மனைகள் மட்டுமே.
ஆனால் நேற்று வந்தவர் ‘கணக்கு’ வேறு, அவர் எதையும் எதிர் பார்க்கவில்லை, உறவுகளை உருவாக்க ஆசைப்படுகிறார், குடும்பம் என்ற கூடு நமக்கு சாதாரணம் ஆனால் அவரைப் பொறுத்த வரை அது ஒரு சொர்க்கம், அவர் அனாதையாக இருக்கலாம், ஆனால் உங்கள் இருவரையும் தாய் தந்தையாகத் தத்தெடுக்க விரும்பும் ஒரு மருமகன், எனவே சொஞ்சம் யோசியுங்கள், அதுபோக வம்ச வரலாறு, குலம் ஜாதி எல்லாம் தெரிந்து திருமணம் செய்து மட்டும் என்ன?
வாழ்க்கை நன்றாக இருந்தால் சரி, இல்லை யென்றால் என்ன செய்ய முடியும் அப்போது ஜாதி, குலம், கோத்திரம் வந்து வாழ்க்கையைக் காப்பாற்றுமா? எப்பேர்ப்பட்ட மன்னர்கள் வாழ்ந்த பூமி இது, அவர்களின் நேரடி வாரிசுகளை இன்றுக் காண்பது, அரிது, அப்படியிருக்கும் போது இவரின் ஜாதி, பரம்பரை பற்றி யோசிக்காதீர்கள்”, எனக் கூறி விட்டு, “இதற்கு மேல் உங்கள் விருப்பம்” எனச் சொல்லிவிட்டு அலுவலகம் விரைந்தாள்.
அதன் பின்பு ஓரிரண்டு வாரங்கள் வீட்டில் இறுக்கமான சூழலே நிலவியது தேனமுது வழக்கம்போல வேலைக்குச் சென்று வந்தாள்.
சமுதாயம், உறவுகள், என்ன சொல்லுமோ ? அதே சமயம் மகள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்க விரும்பும் காரணத்திற்காக ஒரு யாருமற்ற மணமகனைத் திருமணம் செய்ய யோசனைக் கூறியுள்ளது, என பல விதமாக கணேசனும் சுசீலா அம்மாவும் யோசித்தும், பேசியும் வந்தனர். முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு நாள் தேனமுது அலுவலக வேலையை முடித்து வீட்டிற்குக் கிளம்ப நினைத்த போது, ரூம்பாய் வந்தார், “என்னப்பா, ஏதாவது ரசீது போட வேண்டுமா ?” என்றாள் “இல்லையக்கா உங்களைப் பார்க்க ஒரு அண்ணன் வந்துள்ளார், ரொம்ப லட்சணமாக இருக்கார்க்கா” என்று சொல்லி சிரித்தவாறு சென்று விட்டான்.
யாராக இருக்கம்? ஒருவேளை நந்தி வர்மனோ? அடடா பெற்றோர் இன்னும் பதில் எதுவும் சொல்லவில்லையே? சரி, அவரிடம் பெற்றோர் இப்போதைக்கு திருமணம் இல்லை என்றுக் கூறிவிட்டார்கள் எனக் கூறி சமாளிக்கலாம் என நினைத்துக் கொண்டே வெளியே வந்தாள்.
அங்கே அவருடைய இரு சக்கர வாகனத்தின் மீது இவளை எதிர் பார்த்து நந்தி வர்மன் அமர்ந்து இருந்தான், இவளைப் பார்த்ததும்
“தேனமுது எப்படி இருக்கிங்க?” என்று சாதாரணமாகக் கேட்டான்.
“ம்… நன்றாக இருக்கிறேன்” என்றாள்
“சரி வீட்டிற்குக் கிளம்பி விட்டீர்களா?” என்றான்,
“ம், இப்போது கிளம்ப வேண்டும்” என்றாள்.
“சரி அமருங்கள் நான் வந்து உங்களை வீட்டில் விடுகிறேன்” என்றான்.
“பரவாயில்லை, நானே செல்கிறேன்” எனக் கூறிய போது செல்போன் ஒலித்தது மறு முனையில், தேனமுதுவின் தந்தை,
“அம்மா தேனு மாப்பிள்ளை நந்தி வர்மன் அங்கு வந்து விட்டாரா? இன்று நாங்கள் அவரை அழைத்து சம்மதம் சொன்னோம், அவருடைய சார்பாக அவரது அலுவலக ஊழியர்கள் அவர் வளர்ந்த இல்லத்தின் தலைவர் அனைவரும் வீட்டிற்கு வந்து விட்டனர், நானும் அம்மாவும் மகிழ்ச்சியோடு சம்மதம் சொல்லிவிட்டோம் எங்களுக்காக நீ எடுத்த முடிவை நாங்கள் சந்தோஷமாக ஆதரிக்கிறோம்” என போனில் பேசினார்,
“சரிப்பா” என்று சொல்லி போனை துண்டித்தாள்.
“சரி தேனமுது, அப்பா பேசினாரா? இதோ அப்பாவிற்கான மாத்திரைகள் வாங்கிவிட்டேன், அம்மாவிற்கு பழங்கள் உனக்கு பூச்சரம் வாங்கி விட்டேன், வீட்டிற்கு செல்லலாமா?” என்றுக் கேட்டான்.
உறவிற்காக ஏங்கும் அவன் கண்கள், இப்போது இவள் மீது காதலையும் சேர்த்துக் காட்டுவது போல இருந்தது தேனமுதவிற்கு.
“ம், வீட்டிற்கு செல்லலாம்” என அவனுடன் பயணித்தாள், வாழ்க்கையின் பயணத்தை ஆரம்பிப்பதுபோல.
நந்திவர்மன் தனக்கு ஒரு புதிய கூடு கிடைத்த மகிழ்ச்சியில் விழியோரம் கண்ணீர் துளிர்க்க தன்னுடைய கூட்டை நோக்கி தேனமுதுவுடன் ஆனந்தமாய் சென்றான்.