பாங்காக் :
சுற்றுலா வருமானத்தில் கோலோச்சி நின்ற இளைஞர்களின் சொர்கபுரி தாய்லாந்து, இன்று எந்தவித வருமானமும் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.
தாய்லாந்துக்கு சுற்றுலா வருவோரை நம்பி காத்திருந்த பலரும், உலகம் முழுக்க நிலவி வரும் மந்த நிலையாலும் நாலு சுவற்றுக்குள் முடங்கிவிட்ட மக்களாலும் வருமானமிழந்து தவிக்கின்றனர்.
அந்நாட்டின், லோபூரி என்ற இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வழங்கும் உணவு வகைகளை சாப்பிட்டு வாழ்ந்திருந்த குரங்குகள் எல்லாம் தற்போது யாரும் எட்டிப் பார்க்காததால் உணவுக்கு அல்லாடுகின்றன அதனால் அங்கிருக்கும் கடைகளில் உள்ள பொருட்களை சூறையாடுவதுடன், ஊரடங்கால் பூட்டி கிடைக்கும் சினிமா தியேட்டர் உள்ளிட்ட இடங்களை தங்களின் கோட்டையாக்கி மனிதர்கள் யாரும் நுழைய முடியாதபடி ஆட்டம் போட்டு வருகின்றன.
ஊரடங்கு அமலான மார்ச் மாதத்தில் இருந்ததை விட தற்போது உணவு பொருள் சூறையாடல், கோட்டை, கும்மாளம் போன்றவை அதிகரித்து விட்டதால் இதன் இனமும் அதிகமாக பெருகியிருக்கிறது.
இதனால் இங்குள்ள மக்கள் வீட்டை விட்டே வெளியேற பயப்படுகின்றனர், கடை வைத்திருப்போர் தங்கள் கடை முகப்பில் புலி கரடி முதலை போன்ற மிருகங்களின் பொம்மைகளை தொங்கவிட்டும், வேறு சில நூதன வழிகளிலும் அவற்றை விரட்டி வருகின்றனர்.
இருந்தபோதும், ஒரு சில இடங்களில் மக்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்ட பகுதி என்று நகர நிர்வாகம் அறிவிக்கும் அளவிற்கு குரங்குகளின் அட்டகாசம் உள்ளது.
குரங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து பிடித்துவருவதுடன் அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம், அதன் இனப்பெருக்கத்தை தடுத்து நகரத்தை மீண்டும் மனிதர்கள் வசமாக்க முயற்சிக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் வீதிகளில் இறங்கி மீண்டும் சுற்றுலா வருவதற்குள் குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் தனது இலக்கை எட்டிவிடுமா தாய்லாந்து வனத்துறை நிர்வாகம் என்பது சந்தேகமே.