இதையடுத்து, அப்போலோ தரப்பில் நீதிமன்றங்களை நாடியது. சென்னை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில், உச்சநீதி மன்றமோ, ஆணையத்தின் விசாரணைக்கே தடை போட்டது. இருந்தாலும் ஆணையத்தின் ஆயுட்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வருகிறது.
ஆணையனத்தின் அவகாசம் இந்த மாதம் 24ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடந்த திங்கட்கிழமை அன்று கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டு ஓராண்டை கடந்த நிலையிலும், ஆணையம் விசாரணை ஏதும் நடத்தாமலே உள்ளது. அதன் ஆயுட்காலம் மட்டும் நீட்டிக்கப்பட்டே வருகிறது. தற்போது மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே புதிய தலைமைச் செயலக கட்டு மானத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, அது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் செயல்படாத ரகுபதி ஆணையத் துக்கு ரூ.2.23 கோடியை தமிழக அரசு வீணாக செலவழித்துள்ளது என்று குற்றம் சாட்டியதும், அதனால் சலசலப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.