பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் 5 சட்டமேலவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அம்மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இச்சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 9 சட்டமேலவை இடங்களுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஐந்து சட்ட மேலவை உறுப்பினர்கள் அக்கட்சியலிருந்து விலகியுள்ளனர். அவர்கள், சட்ட மேலவை தலைவர் அவதேஷ் சிங்கை சந்தித்து, ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியிலிருந்து, தாங்கள் விலகியதை தெரிவித்தனர். மேலும், தங்களை, தனிப் பிரிவாக செயல்பட அனுமதிக்க வேண்டும்; ஐக்கிய ஜனதாதளத்தில் இணைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
பீகார் சட்ட மேலைவையில், ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு, 8 உறுப்பினர்கள் இருந்தனர். இதில், 5 பேர் விலகியதையடுத்து, அக்கட்சியின் பலம் மூன்றாக குறைந்து விட்டது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதமே உள்ள நிலையில், ஐந்து மேலவை உறுப்பினர்கள் விலகியுள்ள சம்பவம் அக்கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பீகார், மராட்டியம், உத்திரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில், சட்டப் பேரவையுடன் சேர்த்து, சட்ட மேலவையும் உண்டு. இதன் உறுப்பினர்கள் எம்எல்சி என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் இந்த அவை 1986ம் ஆண்டிற்கு முன்பு இருந்தது. ஆனால், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனால், அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக, சட்டமேலவை கலைக்கப்பட்டது என்பது வரலாறு.