டெல்லி: நாட்டில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சோதனைகளுக்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.
உலகளவில் 200 நாடுகளை கடந்து இன்னமும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துவிட்டது.
இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது. அதன் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
அதில், கொரோனா பரிசோதனை, அதன் தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சைகள் ஆகியவையே அந்த வைரசிடம் இருந்து உயிர்களை காக்கும் என்று கூறி உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகள், அரசு, தனியார் அமைப்புகள், மருத்துவமனைகள் ஆகியவை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஆர்.டி.-பி.சி.ஆர், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மற்றும் ஆன்டிபாடி பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளையும் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுகள் அதிகம் காணப்படும் மும்பையில் மிஷன் யுனிவர்சல் டெஸ்டிங் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் கிடைக்கும். அதன் முடிவுகள் அரை மணி நேரத்தில் தெரியவரும்.
நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்த கருவிகளை வாங்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்த கிட்களை வாங்கி தங்கள் ஊழியர்களை சோதிக்க முடியும். 70 வயதை கடந்தவர்கள் எந்த மருந்தும் இல்லாமல் இந்த சோதனைகளை வீட்டிலேயே நடத்தலாம்.