தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (19ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலையில் 1,060 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.