தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள விஜயநாராயணபுரத்தை சேர்ந்த 63 வயது நடேசன் பனை மரத் தொழிலாளி. இவர் கிருஷ்ணகுமார் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல வேலைக்குச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி அவரைத்தேடி தோட்டத்திற்கே சென்று பார்த்துள்ளார்.
அங்கு அவரது கணவர் பனை மரத்தின் மேலேயே தொங்கிய நிலையில் மயங்கி கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரை கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார். உடனே சக தொழிலாளி ஒருவர் மரத்தின் மீது ஏறி அவரை இறக்க முற்பட்டு முடியாமல் போக, வேறு வழியின்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையனரிடம் ஹைட்ராலிக் ஏணி வசதி இல்லாததால், அவர்களா லும் உடனே நடேசனை கீழே இறக்க முடியவில்லை. இதனால் மர ஏணிகளை வரிசையாக கட்டி அதன் மூலமாக தீயணைப்பு வீரர்களை மரம் ஏறச்செய்து நடேசனை கீழே இறக்கியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட கால தாமதத்தினால் அவரின் உடல்நிலை மேலும் மோசமாக பாதிக்கப்பட, உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. எனினும் நடேசனைக் காப்பாற்ற முடியாமல் போனது. இவர் கடுமையான வெயில் காரணமாக இறந்தாரா அல்லது திடீர் மாரடைப்பினால் இறந்தாரா என்பது குறித்த விபரங்கள் ஏதும் தெரியவரவில்லை தற்போது வரை.
தீயணைப்புத்துறையினரிடம் ஏணி போன்ற தகுந்த மீட்பு உபகரணங்கள் இருந்திருந்தால் இத்தொழிலாளியை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றியிருக்க முடியும் என்று அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
– லெட்சுமி பிரியா