சென்னை:
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரானது, பூண்டி ஏரிக்கு ஒரே தவணையாக 8 டி.எம்.சி. தண்ணீராக வந்து சேர்ந்துள்ளது. இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வராக மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் இருதேபோது, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர முதல்வர் ராமராவுடன் தெலுங்கு கங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, ஆந்திரா அரசு, சென்னைக் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை வழங்கவேண்டும்.
தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய முக்கிய ஏரிகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருவதாலும், கோடை காலம் மற்றும் கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்யே முடங்கி உள்ளதால், நீரின் தேவை அதிகரித்திருப்பதாலும், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதைச்சமாளிக்க கிருஷ்ணா நீரை திறக்கவேண்டும் என ஏற்கெனவே ஆந்திர அரசிடம் தமிழக அரசு கோரிகைக் வைத்தது. அதன்படி, கடந்த மே மாதம் 25-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடிதிறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை முதல் விநாடிக்கு 1,200 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் 152 கி.மீ.தொலைவில் உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு, மே 29ந்தேதி இரவு வந்தடைந்தது. அப்போது, விநாடிக்கு20 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீர், பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து வரத் தொடங்கியது. அதன்படி விநாடிக்கு 316 கன அடி நீர் வந்தது.
ஜீரோ பாயின்டை அடைந்துள்ள கிருஷ்ணா நீர், அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று (ஜூன் 21ந்தேதி) காலை 10.45 மணிக்கு வந்தடைந்தது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரே தவணையில் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்திற்கு வந்த, அதிகபட்ச நீரின் அளவு என்ற புதிய சாதனை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.