சென்னை:
கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். அது பற்றி எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? நாம் மருத்துவர்கள் இல்லை. மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். படிப்படியாகத்தான் குறையும், மக்கள்தான் அரசாங்கம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை திறந்து வைத்து ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நிபுணர்கள் வழிகாட்டுதல்படி தடுப்பு பணிகள்
“இந்த நோய் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அரசு கடுமையான முயற்சி எடுத்து இந்த வைரஸ் பரவலைத் தடுக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்னுடைய தலைமையிலேயே பலமுறை வைரஸ் தடுப்பு பணி குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் பலமுறை நடத்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற வழிகாட்டுதல்படி தமிழக அரசு வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது ஒரு புதிய நோய், இந்த நோய் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடத்திலும் வெளிமாநிலத்திற்கு சென்று வந்தவர்களிடத்தில் இருந்தும் தமிழகத்தில் இந்த நோய் ஆரம்ப காலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்து குணப்படுத்தப்பட்டது. அவர்களுடன் யார் யார் தொடர்பில் இருந்தார்களோ அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இது ஒரு புதிய நோயாக இருக்கின்றபடியால் இதற்கு உலக அளவிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. நம்முடைய மருத்துவர்களின் கடும் முயற்சியாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பல குழுக்களின் சிறப்பான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்த காரணத்தினால் குணமடைந்தவர்கள் 54 சதவீதமாக உள்ளனர்.
இருந்தாலும், அரசு மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஊடகத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பத்திரிகைகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். பேட்டியின் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறை மூலம் வீதிவீதியாக ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு அறிவித்த இந்த ஊரடங்கையும் அரசு அமல்படுத்தி மக்கள் வீட்டிலே இருப்பதற்கு உண்டான வழி வகைகள் செய்யப்பட்டு, அதன் மூலமாக பரவலைத் தடுப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சென்னையில் 300 பரிசோதனை மையங்கள்
ஊரடங்கு என்பது யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. யாரையும் சோதனைக்கு உள்ளாக்குவதில்லை. இந்த பரவலைத் தடுப்பதற்காகத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், நோய் அறிகுறி உள்ளவர்கள் வெளியே சென்றால் மற்றவர்களுக்கு பரவிவிடும். ஆகவே இந்த ஊரடங்கு மூலமாக அவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கின்றபோது இந்த தொற்று மற்றவர்களுக்கு பரமாமல் தடுக்கப்படும். அதோடு, மாநகராட்சி மருத்துவர்களும், சுகாதாரத்துறையும் இணைந்து வீடு வீடாக சென்று எந்தெந்த பகுதிகளிலேயே நோய் அறிகுறி இருக்கிறது என்று கன்டறிந்து அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனையில் அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு இந்த ஊரடங்கு பயன்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்திலேயே ஆங்காங்கே காய்ச்சலைக் கண்டறிவதற்காக சுமார் 300 இடங்களில் பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதை அதிகரிக்க வேண்டும் முயற்சி எடுத்து வருகிறோம். அதை 450 ஆக உயர்த்த முயற்சி எடுக்கின்றபோது, பரிசோதனைக்கு வருகின்றவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காய்ச்சல், இருமல், தொண்டைவலி இருக்கின்றதா என்று எல்லாம் கண்டறித்து அவர்களுக்கு ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை செய்து தொற்று இருந்தால் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
இதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த வைரஸ் தொற்றை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிகமிக அவசியம். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தயவுசெய்து அருள்கூர்ந்து பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இன்றைக்கு பல கட்சி தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு சாலையிலே அதிகமான வாகனம் செல்கின்றபோது குறுக்கே சாலை இருக்கும். யாரும் விபத்து ஏற்படக் கூடாது என்று வேகத்தடை போடுவோம். அது மாதிரி இந்த ஊரடங்கை தடுப்பதற்குதான் ஊரடங்கே ஒழிய மற்றபடி எதுவும் கிடையாது. இந்த நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு உதவ வேண்டும்.
இன்றைக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பேர் சொல்கிறார்கள் அரசாங்கம் சரியான முறையில் நடவடிக்கை இல்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
இது ஒரு புதிய நோய். நான் பலமுறை ஊடகங்கள் மூலம் பத்திரிகைகள் மூலம் தெரிவித்திருக்கிறோம். இன்னும் அதற்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை. மருத்துவர்கள் நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறையைக் கடைபிடித்துதான் அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டிற்கு வெளிமாநிலத்திற்கு சென்றவர்கள் மூலமாக வந்த இந்த வைரஸைக் கட்டுபடுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதற்கு பொதுமக்களும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியாவிலேயே அதிகமான சோதனை தமிழகத்தில்தான்
கொரோனா பரிசோதனை நிலையங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை நிலையங்கள் இருக்கிறது. இதுவரை 8 லட்சத்து 27 ஆயிரத்து 980 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளோம். இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான். மாதிரி பரிசோதனைகளையும் அதிகப்படுத்தி இருக்கிறோம்.
நேற்றைய தினம் (19ந்தேதி) 27,510 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கூடுதலாக பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து இன்னும் கூடுதலாக பரிசோதனை செய்ய முயற்சி எடுத்து வருகிறோம். 23,550 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்ரு 2,115 பேர் பரிசோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் 17,500 படுக்கைகள்
சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை 17,500 படுக்கைகள் ஏற்பாடு செய்து உள்ளோம். சிகிச்சை வசதி இல்லாதவர் களுக்கு அரசாங்க மருத்துவமனையில் செய்தோம். வசதி இருக்கிறவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் செய்துவருகிறோம். காப்பீடு திட்டத்தையும் நாங்கள் அறிவித்திருக்கிறோம். காப்பீட்டுத் திட்டத்தையும் இணைத்துக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் போய் பரிசோதனை செய்துகொள்ளலாம். அங்கே அவர்கள் கட்டணம் செலுத்துவதில்லை.
பரிசோதனைக்கு உட்படுகிறபோது நோய் அறிகுறி இருந்தால்கூட அது வெளியில் தெரிவது இல்லை. அப்படி 80% அவர்கள் 7 அல்லது 8 நாட்களில் குணமடைந்து சென்று விடுகிறார்கள். அறிகுறிகளுடன் 20 சதவீதம் பேர்தான் இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து சென்றவர்களுக்கு பரிசோதனை செய்து தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்கின்றனர். வெளி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைவு. சென்னையில் இருந்து சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பரிசோதனை செய்து மருத்துவமனையில் சேர்த்து குணமடைந்திருக்கிறார்கள்.
கொரோனா எப்போது ஒழியும்…இறைவனுக்குத்தான் தெரியும்…
கோரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். படிப்படியாகத்தான் குறையும் ஒழிக்க முடியாது என்கிறார்கள். நோயை தடுக்கதான் முடியும் ஒழிக்க முடியாது என்று சுகாதாரத்துறையும் உலக சுகாதார அமைப்பும் சொல்கிறார்கள். நம்முடைய மருத்துவ நிபுணர்கள் குழுவும் இதைத்தான் சொல்கிறார்கள்.
இதற்கு நாம் ஒவ்வொருவரும் இந்த நோயின் தன்மையை அறிந்து வீரியத்தை அறிந்து தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் பல வழிமுறைகளை சொல்லி இருக்கிறது. வெளியில் செல்கிறபோது முகக்கவசம் அணிய வேண்டும். பொருள்களை வாங்கும்போது இடைவெளி விட்டு நிற்க வேண்டும். காய்கறி கடைகள், இறைச்சி கடைகளுக்கு சென்றாலும் சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். அப்போதுதான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் காய்ச்சல் தொடர்பான சோதனை முகாம்கள் அதை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் கூறினேன். அதன்படி 527 முகாம்கள் நேற்றையதினம் நடத்தியிருக்கிறார்கள்.
மக்கள்தான் அரசாங்கம் …
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 54% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அரசாங்கம் என்று தனியாக கிடையாது. மக்கள்தான் அரசாங்கம். அதனால், மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே இந்த கொரோனா நோயை தடுக்க முடியும். முகக்கவசங்களை அணிந்து, கைகளைக் கழுவி அடிப்படை சுகாதார வழிகளை கட்டாயமாக மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முக கவசம் தான் ஒரே வழி.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.
பின்னர் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தமுதல்வர், சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என அமைச்சர் கே.பி.அன்பழகனே மறுத்துள்ளார் என்றும் கூறினார்.