சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட் டுள்ள நிலையில், விதிகளை மீறி ஊர் சுற்றிய 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையின் நுழைவாயிலில் காரணமின்றி சுற்றித் திரிந்த 100க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அண்டை  மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நோய் பரவலை தடுக்கும் வகையில்  முழு ஊரடங்கு இன்று முதல் 30ந்தேதி வரை கடும் கட்டுப்பாடுகளுடன்  அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இ.பாஸ் இல்லாமல், முக்கவசம் அணியமால் வாகனங்களில் வந்தால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
சென்னையில் மட்டும் 288 இடங்களில் தடுப்பு வைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர். உரிய பாஸ் இல்லாமல் வாகனங்களில் சுற்றுவோரை எச்சரித்தும், வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சென்னையின் நுழைவாயிலாக உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்,  செங்கல் பட்டு சாலைகளில் வாகனங்கள் வழக்கம்போல அணிவகுத்தன. பலர்  காலாவதியான பாஸ்களை வைத்துக் கொண்டு, வாகன சோதனையில் ஈடுபட்டு வரும்  காவலர்களிடம் வாக்குவாதம் செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் மேலும் போலீசார் குவிப்பட்டு,  மீறி செல்வோர்களை மடக்கி பிடித்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சென்னையில் மட்டும் விதிகளை மீறியதாக 500 மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு உள்ளன. ஏராளமான இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.