டெல்லி:
ஜூன் 23ல் நடைபெறும் இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.
இந்தியா – ரஷ்யா – சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பு RIC (Russia-India-China) என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் 23ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தத.
இதற்கிடையில், காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லை பகுதியில், இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினை மூண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக RIC கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறுவது கேள்விக்குறியானது. ஆனால், ரஷியா தரப்பில் கூட்டத்தை கூட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டம் மூலம் இந்தியா – சீனா இடையே சமாதானத்தை ஏற்படுத்தலாம் என முயற்சி மேற்கொண்டு வந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியா மறுத்து வந்த நிலையில், தற்போது பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.