தற்போது இந்தியா – சீனா இடையே எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நிகழ்ந்துவரும் மோதலால் இருநாட்டு உறவில் பெரியளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் நிகழாத வகையில், ஜுன் 15ம் தேதி, சீன ராணுவத்துடன் நடந்த மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது, இந்தியாவில் சீனாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்புணர்வை உருவாக்கியுள்ளது.
சீனப் பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென்ற முழக்கங்களும் எழலாம். அதாவது, சீனாவுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பிற்கான அறைகூவல் எழலாம்.
ஆனால், பொருளாதார ரீதியாக சீனாவை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியுமா? என்றால், இல்லை என்பதுதான் பதில்.
ஏனெனில், சீன முதலீடுகள் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சீனாவின் எந்தெந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.
ஆன்ட் ஃபைனான்சியல்/அலிபாபா
இந்நிறுவம் இந்தியாவின் மிக முக்கியமான முதலீட்டாளர். பேடிஎம் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றில் பல மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
டேன்சென்ட்
இந்நிறுவனம் இந்தியாவில் ஃபிளிப்கார்ட், ஸ்விக்கி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களில் பெரியளவில் முதலீடு செய்துள்ளது.
ஷன்வே கேபிடல்
இந்நிறுவனம், இந்தியாவில் சொமாட்டோ, மீஷோ ஆகியவற்றில் கணிசமாக முதலீடு செய்துள்ளது. மொத்தம் 17 நிறுவனங்களில் 129 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக முதலீடு செய்துள்ளது.
ஸியோமி
இந்நிறுவனம், தற்போதைய நிலையில், 8 இந்திய நிறுவனங்களில் 61 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதுதவிர, வரும் நாட்களில் மொத்தம் 100 இந்திய நிறுவனங்களில் ரூ.6000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹில்ஹவுஸ் கேபிடல்
இந்நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே 165 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஸ்விக்கி மற்றும் கார்டெக்கோ ஆகியவற்றில் இதன் முதலீடு உள்ளது.
டிஆர் கேபிடல்
கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் தனது அலுவலகத்தை திறந்தது இந்நிறுவனம். ஃபிளிப்கார்ட், லென்ஸ்கார்ட், பிக்பாஸ்கட் உள்ளிட்ட 9 நிறுவனங்களில் இது முதலீடு செய்துள்ளது. இதன் ஒட்டுமொத்த முதலீடு 111 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
எனவே, நிலைமை இவ்வாறு இருக்கையில், சீனாவுக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பு என்பது அவ்வளவு எளிதானதல்ல என்றே நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.